சுருதியை மாற்றும் சம்பந்தர் அரசுமீது நம்பிக்கை இழந்தாரா?
2016ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டுவிடும்
என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் ஒற்றை ஆட்சியின் கீழ் அரசு தருகின்ற தீர்வை பெற்றுக் கொள்வதற்குத் தயாராக இருந்தார்.
எனினும் இப்போது சம்பந்தரின் பண்ணும் பதமும் மாறத் தொடங்கியுள்ளது.
தனது காலத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சம்பந்தர் அதற்காக பல்வேறு விட்டுக்கொடுப்புகளை அரசுக்கு செய்திருந்தார்.
வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்கட்சித் தலை வரும் அவர் சார்ந்த கட்சியினரும் ஆதரித்ததன் மூலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தார். இதற்கு மேலாக இந்த நாட்டின் சுதந்திர தின விழாவிலும் சம்பந்தர் பங்கு பற்றி தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முற்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்றில்லை என்று கூட சம்பந்தர் கூறும் அளவுக்கு இந்த ஆட்சியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படும் என நம்பியிருந்தார். ஆனால் இப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தனது சுருதியை மாற்றத் தலைப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் நடந்த கட்சி மாநாட்டில் சமஷ்டி முறையிலான தீர்வை சம்பந்தர் வலியுறுத்தியதும் சகலரும் அதிர்ந்து போயினர்.
இதனைத் தொடர்ந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு வலிமையானதாக இருக்கவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள நிலைப்பாடுகள் அவரின் கருத்துக்களாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. திவயின என்ற சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் ஆங்கிலேயர்கள் சிங்களவர்களிடம் கையளித்த தமிழர்களின் நாடு மீண்டும் எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சம்பந்தர் கர்ச்சித்திருப்பது அதிர்ச்சியான உண்மை.
ஆங்கிலேயர்கள் சிங்களவர்களிடம் கையளித்த தமிழர்களின் நாடு மீளவும் எங்களிடம் தரப்பட வேண்டும் எனில் அது தனிநாடாகக்கூட இருக்கலாம் என்பதே பொருள்.
ஆக, இணக்க அரசியல் அவசியமானது. இலங்கை அரசை எதிர்த்து நாம் எதையும் பெற்று விட முடியாது என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறிய சம்பந்தர் இப்போது திடீர் என தனிநாடு கேட்கும் அளவில் தனது நிலைப்பாட்டை மாற்றியமை எதற்கானது?
இலங்கையின் நல்லாட்சி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமாட்டாது என்றா? அல்லது நாங்கள் கூடுதலாகக் கேட்டோம். அவர்கள் குறைவாகத் தந்தார்கள். தொடர்ந்து முயற்சிப்போம் என்று சொல்லி தமிழர்களை ஆற்றுப்படுத்துவதற்கான பூர்வாங்க முயற்சியா? அல்லது தமிழ் மக்கள் பேரவையின் உதயமா? எதுவுமே புரியாமல் உள் ளது.
இருந்தும் நல்லாட்சியில் சம்பந்தருக்கு நம்பிக்கையீனம் ஏற்படத் தொடங்கியுள்ளது என்று கூறுவதைத் தவிர இப்போதைக்கு மேலதிகமாகச் சொல்ல எதுவுமில்லை.