விஜயகலாவுக்கு எதிராக பிரதமர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? - விமல் கேள்வி
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை விட மிகவும் மோசமான முறையில் இனக் குரோதத்தை தூண்டும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை ஏடுக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை யில் ஒருபோதும் சந்தர்ப்பம் அளிக்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கத்தின் நிலைப்பாடு முரணானதாகவே காணப்படுகின்றது. உள்ளக விசாரணை பொறிமுறையை தவிர சர்வதேச பொறிமுறைக்கு ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
ஆனால், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் முற்றிலும் மாறான கருத்ததையே தெரிவித்துள்ளார். சமஷ்டி முறையிலான ஆட்சி நிர்வாகம் உள்ளக கட்டமைப்புகள் தொடர்பில் கருத்து தெரிவிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. அரச வியூக கட்டமைப்பை வேறு நாடுகளுக்கு தீர்மானிக்க சந்தர்ப்பம் அளிக்க முடியாது.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் தேசிய கொடியை ஏற்றுவதை தவிர்த்து கொண்டிருந்தார். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராகவும் அவர் உள்ளார்.
இந்த நிலையில் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்தமையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட மோசமான நிலைப்பாட்டில் விஜயகலா உள்ளமை வெளிப்படுகினறது. இதற்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன ? என்றார்.