Breaking News

கலப்பு நீதிமன்றத் திட்டம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதாம் – கலங்குகிறார் மகிந்த

இலங்கையில் கலப்பு நீதிமன்ற விசாரணை பற்றிய திட்டம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

தங்காலை கடற்கரையில் நேற்று உரையாற்றிய அவர், “ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் பயணத்துக்குப் பின்னரும், கலப்பு நீதிமன்ற விசாரணைத் திட்டம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

 இராணுவம் போரை முடிவுக்குக் கொண்டு வராது போயிருந்தால், செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கைக்கு வந்திருக்க முடியாது.

போரின் போது எந்தவொரு படைவீரராவது, குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டால், அவர் மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை செயிட் ராட் அல் ஹுசேன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அதன் அர்த்தம் என்னவென்றால் முழு இராணுவமும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பது தான். இலங்கை மக்களுக்கு என்ன கூறப்பட்டுள்ளது என்பது முக்கியமல்ல. அனைத்துலக சமூகத்திடம் நாடு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.