கடந்த காலத்து இரகசியங்களை வெளியிடுவோம் - மிரட்டுகிறது பொதுபலசேனா
கடந்த காலத்தில் எமக்குத் தெரிந்த இரகசியங்களை நாம் பிரதமரிடம் தெரிவிக்க தயாராக உள்ளோம். பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்து எமக்கு தெரிந்த உண்மைகளை தெரிவிக்கின்றோம். ஆனால் ஞானசார தேரரை விட்டுவிடுங்கள் என்று பொதுபலசேனா அமைப்பினர் கோரினர்.
பிரதமருடன் நெருங்கிய நட்பில் ஞானசார தேரர் இருந்தார் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் எம்முடன் சந்திப்புகளை மேற்கொண்டனர். அதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கத்திலும் எம்முடன் பேச்சுவார்த்தைகள் நடத்தனர். அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துடன் ஞானசார தேரருக்கு தொடர்புகள் உள்ளது.
தனிப்பட்ட ரீதியில் இருவருக்கும் நல்ல நட்புறவும் உள்ளது. அவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் பிரதமர் தனது உரையின் போது ஞானசார தேரர் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் வருத்தத்துக்குரியது.
அதேபோல் எம்மை அடிப்படைவாதிகள் எனவும் பண்டாரநாயக்கவை கொன்ற புத்தரக்கித தேரருக்கு ஞானசார தேரரை ஒப்பிட்டு பேசியமையும் வருத்தமளிக்கும் செயலாகும். எனவே இது தொடர்பில் எமது கண்டனத்தை நாம் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் இந்த நாட்டில் நாம் பெளத்த கொள்கையின் அடிப்பைடயில் தான் செயற்பட்டு வந்துள்ளோம். அதேபோல் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஆதரித்தும் அதேவேளை நாட்டை பிளவுபடுத்தும் பிரிவினை வாதிகளுக்கு எதிராகவுமே நாம் செயற்பட்டோம்.
ஆனால் எம்மை அடிப்படைவாதிகள் என்ற அடிப்படையில் சித்தரித்து இந்த நாட்டில் மக்கள் மீது தவறான கருத்துக்களை புகுத்திவிட்டனர்.
அதேபோல் கடந்த காலத்தில் நாம் சிறிகொத்த காரியாலயம் மீது அத்துமீறி படையெடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் இந்த சம்பவங்களின் பின்னணியில் பல இரகசியங்கள் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல்யமான ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நாம் அங்கு சென்றோம். இந்த இரகசியங்களை நாம் பிரதமரிடம் தனிப்பட்ட ரீதியில் தெரிவிக்க தயாராக உள்ளோம். அதேபோல் எமக்கு தெரிந்த சில இரகசியங்களையும் தனிப்பட்ட ரீதியில் எம்மால் கூற முடியும். இது யாரையும் காட்டிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. ஆனால் எமக்கு தேவைப்படுவது எல்லாம் எமது ஞானசார தேரர் விடுதலையாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.