பொங்கல் நிகழ்வில் பங்கேற்றது தொடர்பில் மாவை விளக்கம்
அரசியல் கைதிகள் விடுதலை, மக்கள் மீள்குடியமர்வு, நிலப்பிரச்சினை தீர்வு என்பவற்றை வலியுறுத்தவே உயர்பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டேன். ஏனைய நிகழ்வில் கலந்துகொள்ளமாட்டேன் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யுமான மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்விற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் வருகை தரவுள்ளனர்.
இப்பகுதி இராணுவத்தினரின் வசம் உள்ளது. பலாலி பகுதி உட்பட ஏனைய பகுதிகள் விடுவிக்கப்படாது இருப்பதை சுட்டிக்காட்டவும் இவ்விடங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தவுமே இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளேன். (நேற்று நடைபெற்றது) தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகளில் நான் கலந்துகொள்ளமாட்டேன்.
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கவேண்டும் என்பதற்காக நாங்களும் மக்களும் சேர்ந்து பல போராட்டங்களை செய்கின்றோம். உண்ணாவிரதப் போராட்டங்களை செய்து வந்துள்ளோம். அரசாங்கத்துடன் பேசி வந்துள்ளோம். எனினும் எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
இப்பொழுது தான் ஒரு சில ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்படுகின்றன. குறிப்பாக பொங்கல் நடைபெற்ற இவ் ஆலயமும் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இவ்வாறு கோவில்கள், தேவாலயங்கள், பாடசாலைகள், பொது மண்டபங்கள் எல்லாம் இராணுவத்தால் அழிக்கப்பட்டும் அழிக்கப்படாத இடங்கள் இராணுவத்தினரின் வசம் பயன்பாட்டில் உள்ளன.
பொங்கல் தினத்திலும் புத்தாண்டு தினத்திலும் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி கூறியதுபோன்று எங்களுடைய பகுதி விடுவிக்கப்படவேண்டும். மக்கள் மீள்குடியமரவும் வாழ்வாதாரம் கட்டியெழுப்பவும் உரிய ஒழுங்குகள் செய்யவேண்டும். இதனை எடுத்துரைப்பதற்காகவே வருகை தந்துள்ளேன் என்றார்.