Breaking News

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தால் வீதியிலிறங்கி போராடுவோம் : ஜே.வி.பி எச்சரிக்கை

இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் சீபாவுக்கு பதிலான பொருளாதார தொழிநுட்ப உடன்படிக்கையை கைச்சாத்திட அரசாங்கம் இரகசியமாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதனை நிறுத்தாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மக்களையும் ஒன்றுதிரட்டி அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

‘அரசாங்கம் ஒப்பந்தம் செய்யவுள்ள இந்த உடன்படிக்கை இலங்கைக்கு மிகவும் நெருக்கடியான பொருளாதார உடன்படிக்கையாகும். முன்னர் கொண்டுவரப்பட்ட சீபா உடன்படிக்கை தொடர்பில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இந்த உடன்படிக்கையை தவிர்த்து வந்தனர்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் சீபாவுக்கு பதிலாக பொருளாதார தொழிநுட்ப உடன்படிக்கையில் இந்தியாவுடன் கைச்சாத்திட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். அந்த விபரம் தொடர்பிலான ஆவணத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்தியா இந்த விடயத்தில் அக்கறை காட்டுகின்றது, இந்திய வியாபார நிறுவனம் ஆவலுடன் இருப்பதும் எமக்கு தெரியும். ஆனால் இலங்கையில் யாருடைய வேண்டுகோளுக்கு அமைய இந்த உடன்படிக்கையை செய்யவுள்ளனர்?

இந்த உடன்படிக்கை தொடர்பிலான திட்ட வரைபை இந்திய தூதுக் குழுவினரிடம் இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இலங்கையின் இந்த வரைபை ஆராய்ந்து விரைவில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்த விடயம் தொடர்பிலான முழுமையான உடன்படிக்கை இந்த ஆண்டு நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் எவரிடமும் இந்த திட்ட வரைபுகள் முன்வைக்கப்படவில்லை.

ஆகவே நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயாது, இலங்கையில் பொருளாதார வர்த்தக நிபுணர்களின் ஆலோசனை இல்லாது குறிப்பாக மக்கள் வரம் இல்லாது இவ்வாறான உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை. முதலில் மக்களையும் பொருளாதார, வர்த்தகர்களையும் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் இந்த விடயம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை முதலில் ஆராய வேண்டும். இலங்கை சர்வதேச பொருளாதார நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

இந்தியா பெரிய நாடு, நேச நாடு என கூறிக்கொண்டு இவ்வாறான உடன்படிக்கைகளை செய்ய அனுமதிக்க முடியாது. கடந்த 1999ஆம் ஆண்டு சந்திரிக்கா இந்தியாவுடன் செய்துகொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின்போது இலங்கை எவ்வாறு நெருக்கடியை சந்தித்தது என்பதை மறந்துவிடக் கூடாது. குறித்த உடன்படிக்கை செய்துகொள்ளும் போது இருந்த 463 மில்லியன் டொலர் வர்த்தக மீதியானது இந்த பதினைந்து ஆண்டுகளில் 3977 மில்லியன் டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.

நாம் ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் பொருளாதார உறவில் எமக்குக் கிடைக்கும் இலாபத்திலும் பார்க்க மிகக்குறைவான இலாபமே இந்தியாவுடனான பொருளாதார நடடிவக்கைகளின் போது எமக்குக் கிடைக்கின்றது. ஆனால் இந்தியா எமது நாட்டின் வளத்தில் அதிகளவில் இலாபமடைகின்றது. குறிப்பாக இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலமாக இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் என்று எதுவும் இல்லை. எமது வளர்ச்சி பூச்சியம் அளவில்தான் உள்ளது.

ஆகவே உடனடியாக அரசாங்கம் இந்த உடன்படிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும். இரகசியமாக இவர்கள் செய்யும் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக பாதிக்கின்றன. இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியை சுரண்டும் ஒரு மறைமுக நடவடிக்கையாகவே இதை கவனிக்க வேண்டும். எனவே அரசாங்கம் இந்த மோசடிகளை நிறுத்தாவிடின் அனைத்து தொழில் சங்கங்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராடவேண்டிய நிலைமை ஏற்படும்’ என்றார்.