Breaking News

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் தீர்வாக அமையாது - சண்.குகவரதன்

யுத்தத்தின்போது காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் தீர்வாக அமையாதெனவும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும் மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.

உண்மைகள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நியாயமாக அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

‘யுத்தத்தில் காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்ற பிரதமரின் கருத்து மனதுக்கு வேதனை அழிக்கிறது. அப்படி அனைவரும் உயிருடன் இல்லையென்றால் அவர்களை கொன்றவர்கள் யார் என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். அவர்களை கொன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அத்தோடு கடந்த காலங்களில் மஹிந்த ஆட்சியாளர்கள் நடத்தி வந்த இரகசிய முகாம்கள் தொடர்பிலும் அங்கு ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டமை தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகின. அது மட்டுமல்லாது பூஸா முகாம் மற்றும் மகசின் விளக்கமறியல் உட்பட தனிப்பட்ட முகாம்களிலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரதும் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் பெயர்கள் வெளியிடப்படவேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் யுத்தத்தில் காணாமல் போனோர் எத்தனை பேர் உயிரோடு இருக்கின்றனர் என்பதை அவர்களது உறவினர்களால் தெரிந்து கொள்ளமுடியும். காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்கள் சார்ந்த குடும்பங்கள் எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையலாம். ஆனால் அக்குடும்பங்களின் மனித உறவுகளின் பிரிவிற்கு பரிகாரமாக இது அமைந்துவிடாது.

தமது உறவுகள் உயிரோடு இருக்கின்றார்களா இல்லை இறந்துவிட்டார்களா என்ற உண்மையை தெரிந்துகொள்ளாது வெறுமனே மரண சான்றிதழை கையில் வைத்துக்கொண்டு காணாமல் போனவர்களின் உறவுகள் நிம்மதியடையப் போவதில்லை. எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் வெறுமனே சட்டத்தை மட்டும் முதன்மைப்படுத்தாது உறவுகள் தொடர்பில் மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.