Breaking News

மஹிந்தவின் புதிய கட்சி சுதந்திர தினத்தில் அறிமுகம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையிலான புதிய கட்சி மற்றும் அதன் பெயர் ஆகியவற்றை இலங்கையின் சுதந்திர தினத்தன்று அறிவிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. குறித்த தினத்தில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய சுதந்திர தின வைபவத்தை புறக்கணித்து, அந்த தினத்தில் புதிய கட்சியை அறிவிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உத்தேசித்துள்ளதாக அறியமுடிகிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் இந்த புதிய கட்சிக்குத் தலைமை வகிக்கவிருப்பதாகவும், மஹிந்த ராஜபக்ச இக்கட்சியின் தலைவர் பதவியை ஏற்க மாட்டார் என்றும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

தனது புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைவராக்கும் முயற்சியில் மஹிந்த ஈடுபட்டிருப்பதால், புதிய கட்சியின் தலைவர் பதவியை தாம் பொறுப்பேற்றால் அந்த முயற்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் இத்தீர்மானத்தை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்சவை புதிய கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு யோசனை முன்மொழியப்பட்டிருக்கிறது.

அதேவேளை இந்தப் புதிய கட்சிக்கு தாமரை பூ சின்னத்தை வழங்க தேர்தல்கள் செயலகம் இணங்கவில்லை என்பதால் தாமரை மொட்டு சின்னத்தில் புதிய கட்சியை அறிமுகப்படுத்தவும் ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இப்புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.