விக்னேஸ்வரனைச் சந்தித்தார் கவிப்பேரரசு வைரமுத்து
இலங்கை வந்துள்ள இந்தியக் கவிஞர், பாடலாசிரயர் கவிப்பேரரசு வைரமுத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
வட மாகாணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தந்த வைரமுத்து, யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரைச் சந்தித்தார். நேற்று இரவு 7.00 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உடனிருந்தார்.
இந்த சந்திப்பின் போது, கவிஞர் வைரமுத்து, முதலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து, வடமாகாண முதலமைச்சர் கவிஞர் வைரமுத்துவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், பனை ஓலையினால் செய்யப்பட்ட மாலையையும் அணிவித்தார்.
பின்னர் கவிஞர் வைரமுத்து, தான் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றினை முதலமைச்சருக்கு வழங்கியதுடன், யாழ்.பொது நூலகத்திற்கும் ஒரு தொகுதி நூலினை அன்பளிப்பாக வழங்கினார்.
நாளை சனிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டே வைரமுத்து இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.