ஜனாதிபதி- பிரதமர் தலைமையில் யாழில் இன்று தேசிய பொங்கல் விழா
தேசிய பொங்கல் விழா இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் பலாலியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
பொங்கல் விழாவையொட்டி பலாலி கிழக்கில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெறும் விசேட வழிபாடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்களுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையரும் தேசிய பொங்கல் விழாவில் கலந்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு கலை கலாசார நிகழ்வுகளிலும் இவர்கள் பங்குபற்றி தேசிய பொங்கல் விழாவை சிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வின்போது இந்துசமய அறநெறி பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
மேற்படி நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.