Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 46

அருட்சகோதரர் ஒரு புன்னகையுடன்
திரும்பி கந்தசாமியைப் பார்த்துவிட்டு, “கந்தசாமி நீங்கள் சொல்லுறதிலை இருக்கிற நியாயம் எனக்கு விளங்குது எண்டாலும் விசாரித்து முடிக்க முன்பு தீர்ப்பு வழங்க முடியாதல்லே?” என்றார். கந்தசாமி அமைதியானான். பின்பு அவர் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவனைக் கேட்டார். “நீ பொய் சொல்லித்தான் பள்ளிமுனை ஆக்களைக் கூட்டி வந்தனீ, இல்லையே?” அவன் அனுங்கும் குரலில் தயங்கியவாறே, அப்படித்தான் கொமாண்டர் சொல்லிவிட்டவர்”, என்றான்.

அருட்சகோதரர் எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டுச் சொன்னார், “ரணகோஷ நடவடிக்கையின் போது மடு சின்னக் கோவில் மேலை எறிகணை வீசி 60 பேருக்கு மேலை படுகொலை செய்து ஏராளமானோரை படுகாயப்படுத்தினது. இப்ப கோவில் வளாகத்திலை தாக்குதல் நடத்தி மாதாவை இடம்பெயர வைச்சது போலை இராணுவ அணி அக்கிரமங்கள் சிங்களக் கத்தோலிக்க மக்களை படையினர் மேலும் இந்த அரசின் மேலும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்திவிட்டது. அதைத் தணிக்க மேற்கொண்ட ஒரு தந்திரமான சதி தான் இவையளைச் சொரூபத்தை திருடிக் கொண்டு போக இஞ்சை இராணுவம் அனுப்பினது”.

“ஒண்டும் விளங்கேல்லை சுவாமி”, என்றான் யோசப். “அதாவது மாதா சொரூபத்தை கொண்டு போய் மீண்டும் மடுவிலை வைச்சிட்டு, விடுதலைப்புலிகள் கடத்திக் கொண்டு போன மாதாவை தாங்கள் மீட்டு வந்ததாக சிங்கள கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து தங்கடை குற்றத்தை மறைக்கிறது தான் அவையின்ர திட்டம்”

“அப்பிடியெண்டால் இவங்களை அடிச்சே கொல்ல வேணும் சுவாமி”, எனக் கொதித்தெழுந்தார் யோசப். “பொறுங்கோ, யோசப்”, என்றுவிட்டு அந்த இருவரையும் பார்த்து,

“மாதா சொருபத்தை என்ன செய்யிறது எண்டதை அரசோ, அரச படையளோ அல்லது போராளிகளோ தீர்மானிக்கிறதில்லை. அது ஆண்டவனின்ரை சித்தம். மடு நிர்வாகம் பிரார்த்தனைகள் மூலம் அதிலை தெளிவு பெறும்! வெகு விரைவிலை, அது இண்டைக்காய் இருக்கலாம் மாதா தனது வழமையான பீடத்லை திரும்பவும் இருப்பா. எவரும் அவவைத் தங்கடை குற்றங்களை மறைக்கப் பாவிக்க முடியாது” ஆணித்தரமாகவும் நியாயத்தின் உக்கிரத்தன்மையுடனும் அவரின் வார்த்தைகள் வெளிவந்த போதும் அவற்றில் இருந்த சாந்தம் எள்ளளவும் குறையவில்லை. யோசப் ஒரு வித தயக்கத்துடன், “சுவாமி, இவையளை அப்ப போராளியளிட்டை ஒப்படைச்சு விடுவமே?”, எனக் கேட்டார்.

அருட்சகோதரர் மீண்டும் ஒரு முறை எல்லோரையும் பார்த்துவிட்டு, “யேசு பிரானின் தலையிலை கொடிய விஷ முட்களாலை முடி செய்து சூட்டினார்கள். சிலுவையைச் சுமக்க வைத்து கசையாலை அடித்தார்கள். இறுதியிலை சிலுவையிலை அறைஞ்சினம். அப்ப தேவ குமாரன், ‘இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னிப்பீராக’, என தன்னைக் கொடுமைப்படுத்தியவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். இவர்கள் தேவகுமாரனின் அன்னையின் சொரூபத்தை திருட வந்தவர்கள். நாங்கள் இவர்களை மன்னிக்கும்படி ஆண்டவரிடம் பிரார்த்திப்போம்.

காலையிலை பள்ளி முனையிலையிருந்து வாற மீன் வள்ளங்கள் ஒண்டிலை ஏந்தி அனுப்பி விடுங்கோ”, கந்தசாமி மெல்ல சகோரர் அருகில் போய், “சுவாமி.. இவன் ஒரு துரோகி, கொலைகாரன், காமுகன்”, என்றான். “கந்தசாமி! ஒவ்வொரு மனுஷனுக்கையும் மிருகமும், மனுஷனும் குடியிருக்கினம். இவ்வளவு நாளும் மிருகம் அவனை ஆட்டி வைச்சது. இனி அவனுக்கை இருக்கிற மனுஷன் வெளி வருவான் எண்டு நம்புறன்”, என்றுவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.

அந்தத் துரோகியைத் திரும்பிப் பார்த்தான் கந்தசாமி. அவனின் கண்களிலிருந்து நீர் அருவியாக ஓடிக்கொண்டிருந்தது. அன்று முன்னிரவு வேளையில் திடீரெனக் களமுனையிலுள்ள அணித் தலைவர்களையும் குழுக்களின் பொறுப்பாளர்களையும் அவசரமாக கட்டளை பீடத்திற்கு வருமாறு அவசரமாக அழைப்பு வந்தது. மறு நாள் மடு நிர்வாகத்தினால் மாதா சொரூபம் மடுவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் காலை ஏழு மணி தொடக்கம் மாலை ஐந்து மணிவரையும் எவ்வித தாக்குதல்களும் மேற்கொள்ளப்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

கத்தோலிக்க மத பீடம் இரு தரப்பினருடனும் பேசி இந்த ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டான் சிவம். கடந்த மூன்று நாட்கள் எவ்வித தாக்குதல்களும் இடம்பெறாத காரணத்தினால் சண்டை நிறுத்த நேரம் முடிந்ததும் இராணுவம் ஒரு பெரும் எடுப்பிலான தாக்குதலை மேற்கொள்ள முயலலாம் என்பதால் உயர்மட்ட விழிப்புப் பேணும்படி ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த போது ரூபா அவனருகில் வந்தாள். “என்ன சிவம்! எப்பிடி இருக்குது உங்கடை களம்?” எனக் கேட்டாள்.

“பறவாயில்லை.. உங்கடை புண்ணியத்திலை”, என்றான் சிவம் சிரித்தவாறே. “என்ன.. எங்கடை புண்ணியத்திலை எப்பிடி உங்கடை களம் பறவாயில்லாமல் இருக்குது?” “நீங்கள் ஆமியை உள்ள இழுத்து அடிச்சு சிதறடிச்சதுக்கும், விடத்தல் தீவிலை கடற்கரும்புலித் தாக்குதலுக்கும் பிறகு சண்டை நடக்கவேயில்லை” “சந்தர்ப்பம் சரியாய் வாய்ச்சால் சக்கட்டையும் பெரிய சண்டைக்காரி தானே”, “நீங்கள் சக்கட்டையே?” “ம்.. அப்பிடித்தான் கணேஸ் திட்டுறார்,

பரப்புக் கடந்தான் விக்ரர் அண்ணையின்ர நினைவிடத்தை ஆமியிட்ட விட்டிட்டு வர உங்களுக்கு வெட்கமில்லையோ எண்டு ஒரே ஏச்சு”, என்றாள் ரூபா ஒரு பெருமூச்சுடன்.

“அது எனக்கும் கூட தாங்க முடியாத கவலை தான் என்ன செய்யிறது? முந்தி நாங்கள் பிடிச்ச சண்டையளிலை எங்கடை சண்டையையும் சண்டையின்ரை போக்கையும் நாங்களே தீர்மானிப்பம். இப்ப அப்பிடியில்லைத் தானே. ஒவ்வொரு அடியும் கட்டளைப் பீடத்தின்ரை வழிகாட்டலுக்கு அமையத் தானே செய்யவேணும்” “ம்.. பெரியமடுவிலையிருந்து விடத்தல் தீவு வரையும் ஒரு நீண்ட களம். சண்டையிலை பல அணியள், ஒவ்வொரு அணியும் தனித்தனியாகச் செயற்பட ஏலாது தானே, ஒவ்வொரு அணியும் கட்டளை பீடத்தின்ர வழிகாட்டலுக்கு அமையத்தானே செய்யவேணும்” “ஓமோம்.. எனக்கு மூண்டு முறை ஆமியை விரட்டிக் கொண்டு கணிசமான தூரம் முன்னேற சந்தர்ப்பம் கிடைச்சது. அப்பிடி முன்னேறினால் சுற்றி வளைக்கப்படும் அபாயம் இருக்கெண்டு சொல்லி மேலிடம் அனுமதிக்கயில்லை” எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் சிவம்.

“கணேசுக்கு அது விளங்குதில்லையே. சரியாய் சண்டை பிடிக்க முடியாட்டில் குப்பிகடிக்கட்டாம்”, எண்டு ஒரு நாள் என்னை ஏசிப்போட்டார்” சிவம் பெரிதாகச் சிரித்தேவிட்டான். “எல்லாக் காதலருக்கும் தன்ர காதலி காயப்பட்டாலே பெரிசாக் கவலைப்படுவாங்கள். இவன் காதலியை செத்துப்போ எண்டு வாழ்த்திறான்” ரூபா பெருமூச்சுடன் சொன்னாள், “அவர் என்னை விட சண்டையையும் சண்டையின்ரை வெற்றியையும் தான் நேசிக்கிறார்”. “அப்பிடியில்லை, அவன் கால் விழங்காட்டிலும், களத்திலை தான் நிக்கிறான். மனதால”, என்றான் சிவம்.

“அதுக்காக அவரின்ரை விருப்பப்படி அர்ப்பணிப்போடை போராடுகிற என்னை வெறுக்கிறதே”, எனச் சொல்லும் போது அவளின் கண்கள் இலேசாகக் கலங்கின. “என்ன ரூபா நீங்கள் அவன் உங்களை வெறுப்பானே?.. அப்படி உங்களை வெறுத்தால் தற்செயலாய்த் தான் வீரச்சாவடைஞ்சால் நீங்கள் தனிச்சுப் போகக் கூடாது எண்டதுக்காக நான் உங்களை ஏற்க வேணுமெண்டு என்னைக் கேட்டிருப்பானே?” ரூபாவின் மூளையில் ஒரு மின்னல் அதிர்ந்தது. “நீங்கள்.. நீங்கள் இன்னும் அதை நினைவிலை வைச்சிருக்கிறியளே?” என ஒருவித சந்தேகத்துடன் கேட்டாள் ரூபா.

சிவம் மெல்லிய சிரிப்புடன், “சத்தியம் செய்யிறது மறக்கவே? ஆனால்…” என்றுவிட்டு இடைநிறுத்தினான். “ஆனால்…”, என ஒருவித பயம் கலந்த குழப்பத்துடன் கேட்டாள் ரூபா. “அவன் உயிரோடை இருக்கிறான். எனக்கோ உங்களுக்கோ முதல் அவன் வீரச்சாவடைய இனி வாய்ப்பில்லை. அதால நீங்கள் எப்பவுமே என்ர நண்பன்ர காதலி தான்” ரூபாவிடமிருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது. அடுத்தநாள் மாதா சொரூபம் மடுவுக்குக் கொண்டு செல்லப்படப் போகும் செய்தி எல்லா இடமும் பரவிவிட்டது. 

முழங்காவில், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், சேவாலங்கா குடியிருப்பு என எங்கும் இடம்பெயர்ந்து வசித்த மக்களும், அந்த ஊர்களின் நிரந்தரக் குடிகளும் அதிகாலையிலேயே தேவன்பிட்டியில் கூடிவிட்டனர். கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி இந்து சமயத்தினரும் ஆயிரக் கணக்கில் அங்கு திரண்டுவிட்டனர். அவர்கள் அனைவருமே தங்களைப் பாதுகாக்கும் ஒரு தெய்வீகப் பேரருள் தங்களைவிட்டு விலகிப் போவதாகவே உணர்ந்தனர்.

கொழும்பு மேற்றானியார் பீடத்திலிருந்தும், மன்னார் ஆண்டகையின் தலைமைப்பீடத்திலிருந்தும் பல குருவானவர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் கூட இப்படியொரு மக்கள் வெள்ளம் அலைமோதும் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முறைப்படி ஆராதனைகள் எல்லாம் இடம்பெற்ற பின்பு மடுமாதாவின் சொரூபம் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டது. கூடியிருந்த மக்கள் கண்ணீர் சொரிந்தனர். பலர் விம்மி, விம்மி அழுவதையும் இன்னும் சிலர் கதறுவதையும் காணமுடிந்தது. அப்போது தான் ஏறக்குறைய ஒரு நூறு குடும்பங்கள் மக்கள் வெள்ளத்தை விலக்கிக் கொண்டு பெட்டி படுக்கைகளுடன் மாதாவின் வாகனமருகே வந்தன. விடத்தல் தீவின் அருட்சகோதரர் அதிர்ந்துபோனார். அவர் அவர்களின் அருகில் சென்று விசாரித்தார். அவர்களுள் முதியவரான செபமாலை, “சுவாமி, நாங்கள் மடுவிலையிருந்து மாதாவோடை வந்தம். இப்ப மாதா போறா. அவ எங்கை போறாவோ அங்க நாங்களும் போறம்”, என்றார்.

சகோதரர் நிலைமையைப் புரிந்து கொண்டார். அவர்கள் மீண்டும் மடுவுக்குப் போனால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க முயன்றார். ஆனால் அவர்கள் கேட்பதாயில்லை. என்ன ஆபத்து வந்தாலும் மாதா தங்களைக் காப்பாறுவார் என உறுதியாக நம்பினார்கள். என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாத நிலையில் அருட் சகோதரர் யோசப்பை அழைத்து விடயத்தை சொன்னார். யோசப் சிறிது நேரம் யோசித்துவிட்டு புறப்படத்தயாராயிருந்த கூட்டத்திலிருந்த ஒரு நடுத்தரவயதுப் பெண்ணை அழைத்தார். அவள் தயங்கியபடியே அவரருகில் வந்தாள்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

முன்னைய தொடர்களை படிக்க

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 43
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 44
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 45