சேற்றில் விழுவதா? இல்லையா? நிராகரிக்கப்பட்டவர்கள் தீர்மானிக்க வேண்டும்
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படக் கூடிய, மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள் எமது வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி நாட்டை முன்னேற்றுவதா? அல்லது சேற்றுக் குழியிலேயே மூழ்கி கிடந்து நாட்டை படுபாதாளத்தை நோக்கி தள்ளுவதா? என்பதனை தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்
சர்வதேசத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து போனாலும் இலங்கையின் பொருளாதாரம் சீரானதொரு நிலைமைக்கு வரும் என்பதனை சர்வதேசம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே நடப்பாண்டில் இலங்கை பொருளாதாரம், அரசியல் ,சமூக ரீதியாக பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓராண்டு பதவி பூர்த்தியை முன்னிட்டு தேசிய சபை என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூரத்தியாகியுள்ளது. இந்த ஓராண்டு பூர்த்தியாகின்ற தருணத்தில் எமது ஆட்சி குறித்து பாராட்டுக்கள் நிறைந்த வண்ணமுள்ளன. இருந்தபோதிலும் இந்த பாராட்டுக்கள் எல்லாவற்றிலும் பார்க்கிலும் ஒரு வருட பூர்த்தியாகும். இந்த தருணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தை பாராட்டி இரண்டு தரமான அறிக்கைகள் கிடைக்கபெற்றன. இத்தகைய பாராட்டு அறிக்கைகள் இரண்டும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வாயிலாக கிடைக்கபெற்றமை விசேட அம்சமாகும்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் நான் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது தேசிய அரசாங்கம் என்ற வேலைத்திட்டத்திற்கு அவர் பெரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இதன்போது அரசியல், பொருளாதார துறைகளில் பிராந்திய ரீதியாக இலங்கை முன்னிலை நாடாக பரிணமிக்கும் என அவர் என்னிடம் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று நேற்று முன் தினம் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பொருளாதார வல்லுனர்கள் மற்றும் தலைவர்களும் இலங்கையின் பயணத்தை வெகுவாக பாராட்டியிருந்தனர். இந்த வருடமானது சர்வதேச பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பாக அமைய கூடும். சர்வதேச பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்து போகும். என்றாலும் இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திரமான நிலைமையில் காணப்படும் என தெரிவித்திருந்தனர். ஆகவே சர்வதேச பிரதிநிதிகள் எம்மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த கூற்றின் பிரகாரம் இலங்கையானது பொருளாதாரம், அரசியல் ,சமூக ரீதியாக பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகும்.
தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து மிகவும் துன்பகரமான கஷ்டமான தருணத்திலும் கூட அனைத்து சவால்களையும் ஒழுங்கு முறைமையின் பிரகாரம் முகங்கொடுத்து அதனை வெற்றக்கொள்ள முடிந்தது். ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயக புரட்சியை முழு நாட்டு மக்களின் ஆதரவுடனேயே முன்னெடுத்தோம். எமது மாற்றமிகுந்த புரட்சிக்கு வலது - இடது , பருத்திதுறை - தேவந்திரமுனை, கிராமம் -நகரம், தமிழ் ,முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற இன, மத பேதங்கள் பாராமல் அனைவரும் பிரிவினையை மறந்து புரட்சியை வெற்றிக் கொள்வறத்கு உதவி புரிந்தனர். இதன்பிரகாரம் அபாயகரமான புரட்சியை அமைதியாகவும் ஜனாநாயக முறையிலும் வெற்றி கொண்டோம்.
ஜனவரி 8 ஆம் திகதி புரட்சியை சுமார் ஓராண்டு வரைக்கும் வெற்றிகரமாக முன்னெடுத்து வந்துள்ளோம். நாம் ஆட்சிப்பீடமேறியதன் பின்னர் சர்தேச நாடுகளுடன் சிறந்த நட்புறவினை ஏற்படுத்தியுள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை பாதுகாத்து அனைத்து இனத்தவர்களுக்குமிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளோம்.
நாட்டு மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் சட்ட ரீதியான சில திருத்தங்களே இனிமேல் மேற்கொள்ள வேண்டியுள்ளன. இருந்தபோதிலும் குறித்த சட்டத்திருத்தங்களுக்கான அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்த போதிலும் குறித்த சட்டமூலங்களை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து நிறைவேற்ற மாத்திரமே உள்ளது. இதன்பிரகாரம் இது குறித்தான சட்டத்திருத்தங்களை நாம் விரைவில் நிறைவேற்றவுள்ளோம்.
அதேபோன்று புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் வேலைத்திட்டத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் களமிறங்கியுள்ளது. குறித்த அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றவுள்ளோம். இதனூடாக புதிய பாதையை நோக்கி நாம் பயணிக்கவுள்ளோம்.
எனினும் தேசிய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க கூடியவர்கள் அதிகளவில் காணப்பட்டாலும் எமக்கு எதிரானவர்களும் நாட்டில் உள்ளனர். இவர்கள் விடயத்தில் நாம் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படகூடியவர்கள் எமது வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி நாட்டை முன்னேற்றுவதா அல்லது சேற்று குழியிலேயே மூழ்கி கிடந்து நாட்டை படுபாதாளத்தை நோக்கி முன்னகர்த்துவதா? என்பதனை முடிவு செய்ய வேண்டும் என்றார்.