Breaking News

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி அமைக்கும் நடவடிக்கைகள் துரிதம்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்பாக நினைவு தூபி அமைப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண சபையினரால் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது, கொன்றுக் குவிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவாக நினைவுத்தூபி அமைப்பதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டு வட மாகாண சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

முள்ளிவாய்க்கல் நினைவு நாள், மே மாதம் 18ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அத்தினத்திற்கு முன்னர் தூபி அமைப்பதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்காக முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் ஏற்பாட்டில் புதிதாக குழுவொன்றும் மாகாண சபையால் நியமிக்கப்பட்டு உள்ளது.

வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவரையும் உள்ளடக்கியதாக 9 பேர் கொண்ட குழுவாக அது நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தக் குழுவானது எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற மாகாண சபை அமர்வுகளைத் தொடர்ந்து மாகாண சபையில் விசேட கூட்டமொன்றைக் கூட்டி நினைவுத் தூபி அமைப்பது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளது.