Breaking News

அப்பம் புரட்சியின் ஒருவருட பூர்த்தி என்கிறார் விமல் வீரவங்ச

அப்பம் புரட்சியின் ஒரு வருட பூர்த்தியினை கொண்டாடும் முகமாக எமது நாட்டினை துண்டாட நினைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட புலம்பெயர் அமைப்பின் தேவைக்கருதி புதிய அரசியல் ;அமைப்பை ஸ்தாபிக்க முயற்சிக்கின்றனர். 

 கடந்த காலங்களில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு துணைநின்ற தரப்பினரின் தேவைக்கு ஏற்ப எமது நாட்டை தாரைவார்க்க இந்த அரசாங்கம் முயல்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ச குற்றம் சுமத்தினார். 

ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் புதிய அரசியல் அமைப்பை ஸ்தாபித்து எமது நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் தரப்பினரின் கனவுகளை நனவாக்கும் இந்த முயற்சிக்கும் நாம் ஒரு போதும் இடமளிக்கப்பபோவது இல்லை. நாட்டிற்கு எதிராகவும் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு புறம்பாகவும் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் செயற்படுமாயின் நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களையும் ஒன்றினைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராடுவோம் எனவும் அவர் எச்சரித்தார். 

கொழும்பில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய விமல் விரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். 

தற்போதய அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைத்து கடந்த ஜனவரி 08 ஆம் திகதி இந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை மக்கள் ஏற்படுத்திருந்தனர். அந்தவகையில் இன்று மக்களுக்கும் நாட்டிற்கும் எதிராக தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் இந்த அரசாங்கம் அப்பம் புரட்சியின் ஒரு வருட பூர்த்தியினை கொண்டாடி வருகின்றது.

அந்தவகையில் இந்த அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சியில் எமது மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மையளிக்கும் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது?. என்பதானது கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த தேர்தல் வாக்குறுதிகளை நோக்குவோமானால் நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது புதிய தேர்தல் முறை சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட பல்வேறு விடயங்களை முன்னெடுப்பதாக தெரிவித்தனர். இவற்றில் எந்தவொரு விடயமும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலையில் அப்பம் புரட்சியின் ஒரு வருட நினைவுப்பரிசாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட புலம்பெயர் அமைப்புக்களின் தேவை கருதி புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதாக தெரிவித்து எமது நாட்டை பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு துணைநின்ற அமைப்பினருக்கு தாரைவார்க்க முயற்சிக்கின்றது. 

இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் மறுபுறம் எமது நாட்டை துண்டாட நினைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட புலம்பெயர்ந்த அமைப்பினருக்கும் வழங்கிய உறுதிமொழிகளை ஆட்சி பீடம் ஏறியதிலிருந்து சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றது. இதன் இறுதிக்கட்ட நடவடிக்கையே புதிய அரசியல் அமைப்பாகும். 

கடந்தக்காலங்களில் பயங்கரவாதிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய சிவா பசுபதி உள்ளிட்டவர்கள் இன்று எமது நாட்டில் அரசியல் அமைப்புக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர். இன்றைய ஆட்சியானது யாருடைய ஆட்சி என குறிப்பிடமுடியாமல் உள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியா அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியா தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியா புலம்பெயர்ந்தவர்களின் ஆட்சியா என்ற குழப்ப நிலை காணப்படுகின்றது. போர்க்குற்ற விசாரனை என்ற பெயரில் எமது நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்ட இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். மறுபுறம் விடுதலை புலிகளின் ஆதரவாலாளர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். 

இந்த ஒருவருட ஆட்சியில் மக்களுக்கும் நாட்டிற்கும் எதிரான செயற்பாடுகளே இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் புதிய அரசியல் அமைப்பை ஸ்தாபித்து எமது நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் தரப்பினரின் கனவுகளை நனவாக்கும் இந்த முயற்சிக்கும் நாம் ஒரு போதும் இடமளிக்கப்பபோவது இல்லை. நாட்டிற்கு எதிராகவும் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு புறம்பாகவும் தொடர்ந்து இந்த அரசாங்கம் செயற்படுமாயின் நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களையும் ஒன்றினைத்து இந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுவோம்.

இது தொடர்பில் பொது எதிரணியினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அந்தவகையில் தேசிய சுதந்திர முன்னணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராகவே செயற்படுவார்கள் என்றார்.