ராஜித ஆட்கடத்தலில் ஈடுபட்டார் - அம்பலப்படுத்தினார் கோத்தா
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன ஆட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று(வெள்ளிக்கிழமை) ஆஜராகிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த 1988 மற்றும் 89ம் ஆண்டுகளில் நான் இராணுவத்தில் பணியாற்றினேன். நானே மாத்தளைக்கு பொறுப்பான இராணுவ இணைப்பதிகாரியாக கடமையாற்றினேன்.மக்கள் விடுதலை முன்னணி காலத்தில் முகமூடி அணிந்த தலையாட்டிகள் எந்த வாகனத்தில் வந்தனர்? கறுப்பு வாகனங்களிலா, வெள்ளை வாகனங்களிலா?
தற்போது அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன ப்ரா என்ற அமைப்பை வைத்து கொண்டு ஆட்களை கடத்தினார். அந்த காலத்தில் நான் இராணுவத்தில் இருந்தேன்.அந்த காலத்தில் நான் மாத்தளைக்கான இராணுவ இணைப்பதிகாரி. அந்த காலத்தில் மொறிஸ் மைனர் வாகனங்களில் இதனை செய்திருப்பார்கள் போல.
நான் இராணுவத்தில் 20 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றினேன். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு கீழேயே நான் அதிக காலம் பணியாற்றினேன்.தலையாட்டிகள் எந்த வாகனங்களில் கொண்டு வரப்படுவார்கள் என்பது அந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.