புதுவருடத்திலாவது தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டும்! என்கிறார் அனுர
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஓராண்டு நிறைவை அரசாங்கம் கொண்டாடவுள்ளது. ஆனால், வடக்கு கிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் தமது நிலங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த ஆண்டிலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் நகர்வுகள் அமைய வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் இந்த ஆண்டு முடிவுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டில் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற வாக்குறுதியை அரசாங்கம் கொடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மிக நீண்ட காலமாக நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கைபல காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இத்தனை காலமாக ஆட்சி செய்த கட்சிகளும் தமது ஆட்சியை தக்கவைக்க வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றினவே தவிர இதுவரையில் தமிழ் நாட்டை பலப்படுத்தும் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என சிந்திக்கவில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் சிங்கள உறவு பலப்படும், நாட்டில் நல்லாட்சிக்கான கதவு திறக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. எனினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டில் இனவாதமும், பிரிவினைவாதமும் மட்டுமே தலைதூக்கி நாட்டை குழப்பத்திற்குள் தள்ளியிருந்தது.
யுத்தத்தின் பின்னர் சொந்த இடங்களையும்,வீடுகளையும், உறவுகளையும் இழந்த மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தமது விடிவை எதிர்பார்த்து இருந்தபோதிலும் அவர்களுக்கு எந்த நன்மைகளும் கிட்டவில்லை. அவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு மிகமுக்கியமான ஆண்டாக கருதப்பட்டது.
அதாவது ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்ட போது ஜனநாயகத்தை விரும்பி மக்கள் மாற்றத்தின் பக்கம் நின்றனர். அதேபோல் வடக்கு கிழக்கு மக்கள் தமது விடுதலையை எதிர்பார்த்து நல்லாட்சி அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்தனர்.
எனினும் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இன்றுவரையில் ஏற்படவில்லை. தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவும் இல்லை. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதாக கூறி ஒரு வருடம் பூர்த்தி ஆகியுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில் அரசாங்கம் தனது ஒரு வருட பூர்த்தியை கொண்டாடவுள்ளது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு ஆண்டு நிறைவை அரசாங்கம் கொண்டாடும் அதே வேளையில் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் தமது நிலங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் இம்முறை பொங்கல் விழாவையும் ஜனாதிபதியும் பிரதமரும் வடக்கில் கொண்டாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு விழாக்களை கொண்டாடாது அந்த மக்கள் இனிவரும் காலங்களில் அமைதியாகவும் அச்சமின்றியும் புதுவருடத்தையும், எனைய நிகழ்வுகளையும் கொண்டாடும் நிலைமையை உருவாக்கும் வகையில் இந்த அரசாங்கம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல் நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கி அதன் மூலம் நாட்டை பலப்படுத்த வேண்டும். ஆகவே பிறந்திருக்கும் இந்த ஆண்டிலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான செயற்பாடுகள் அமைய வேண்டும்.
அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்த ஆண்டு முடிவுக்குள் நிறைவேற்ற வேண்டும். முன்னைய ஆட்சியில் மக்களை ஏமாற்றியதைப் போல இந்த ஆட்சியிலும் மக்கள் ஏமாற்றப்படக்கூடாது.
அதேபோல் தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் தமது முரண்பாடுகளை மறந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் வகையிலும், ஒற்றுமையை பலப்படுத்தும் வகையிலும் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.