Breaking News

காணிகள் விடுவிப்பு என்ற பிரச்சார மாயைக்குள், தொடரும் நில அபகரிப்பு

தமிழர் தாயகப்பகுதியில் பொதுமக்களின் காணிகள் இலங்கை இராணுவத்தால் விடுவிப்பு என்ற தீவிர பிரச்சாரங்களுக்கு மத்தியில், தொடர்ந்தும் சத்தமின்றி காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகப் பகுதியினை சிறிலங்கா ஆக்கிரமிப்புச் செய்திருப்பது என்பது அரசியல் விவகாரமாக உள்ள நிலையில், பொது மக்களின் நிலங்கள் அபகரிப்பு என்பது அடிப்படை மனித உரிமைப்பிரச்சனை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகப்பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரது உயர்பாதுகாப்பு வலயங்களில் இருந்து, வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில், ஒரு தொகுதி காணிகள் பொதுமக்கள் குடியமர விடுவிக்கப்படுவதாக தீவிரமாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நல்லாட்சியில் காணிகள் விடுவிப்பு என்ற பிரச்சார மாயைக்குள், தொடரும் நில அபகரிப்பு குறித்தான விடயங்களோ, தொடரும் தமிழர்களின் வளங்கள் சுரண்டப்படுவது குறித்தோ ஊடகங்கள் போதிய கவனம் பெறாமை மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா வன இலாகாவுக்குரிய இடங்களன் என்ன அடிப்படையில் காணிகள் அபகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்னமும் 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணிகள் சிறிலங்கா படையினரால் அபகரிப்புக்கப்பட்டு நிலைகொள்ளப்பட்டுள்ளதோடு, சிங்களக் குடியேற்றங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நடந்தேறி வருகின்றன.

தொடர்ந்தும் முள்ளிக்குளத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா கடற்படையினரிடம் இருந்து தங்களின் பூர்வீகக் கிராமமாகிய முள்ளிக்குளத்தை மீட்டுத்தருமாறு மலைக்காடு பகுதியில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் மக்கள் கோருகின்றனர்.

இதேவேளை தமிழர் தாயகப்பகுதினை பௌத்தமயமாக்கும் நோக்கில் புத்த சிலைகளை நிறுவிவரும் சிறிலங்கா அரசு, தனது தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால திருகோணமலை, கோணேஸ்வரம் கோவில் கட்டுமானத்துக்கு தடைவித்தித்துள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த காலங்களில் ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளை அரச தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள், ஓவ்வொரு முறையும் வந்து பார்த்து விட்டு, வேலையை நிறுத்தச் சொல்வார்கள். கட்டடப் பொருட்களைக் கோட்டைக்குள் அனுமதிக்கவேண்டாம் என்று, இராணுவத்தினருக்கு அறிவிப்பார்கள் என இது தொடர்பில் கோவிலின் பரிபாலன சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஆலயத்தின் வளாகத்தில் புதிதாக முளைக்கப்பட்ட கடைகள் அப்பகுதிகளை ஆக்கிரமித்து அவ்விடங்களைச் சொந்தமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவது போலத் தோன்றுகிறது எனவும் அவ்வறிக்கையில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழர் தாயகப்பகுதிகளில் வளங்கள் சுரண்டப்பட்டு வரும் நிலையும் நீடித்து செல்கின்றது.

தெற்கின் அபிவிரித்தி தேவைகளுக்காக சிறிலங்காவின் அரச கட்டமைப்பு பல்வேறு செயற்திட்டங்களின் பெயரில் இதனை முன்னெடுத்து வருகின்றது.

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் ஐயன்கன்குளம், பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான ஆகிய கிராமங்களில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி எடுத்துச்செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி, அக்கராயன் கிழக்கு காட்டுப்பகுதியில் கோணாவில் கிராமத்தின் யூனியன்குளம் வரையான காட்டுப்பகுதிகளிலும், பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியிலும் பெருமளவு மரங்கள், நாள்தோறும் வெட்டப்பட்டு எடுத்துச ;செல்லப்படுகின்றன.

தமிழர் தாயகப்பகுதியினை சிறிலங்கா ஆக்கிரமிப்புச் செய்திருப்பது என்பது அரசியல் விவகாரமாக உள்ள நிலையில், பொது மக்களின் நில அபகரிப்பு என்பது அடிப்படை மனித உரிமைப் பிரச்சனையாக உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.