ஜனாதிபதி,பிரதமரின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடி போராட்டம்
தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. ஆனால் இந்த ஆட்சி காலமும் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது.
குறிப்பாக அரசியல் கைதிகளுடைய விடுதலையை சரியாக நிறைவேற்றவில்லை. காணாமல் போனவர் விவகாரத்தில் தீர்வை முன்வைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணியை விடுவிக்கவில்லை. மேலதிகமான பல முக்கிய பிரச்சனைகளை தீர்க்காத அதே நேரத்தில் அவற்றை மறைப்பதற்கான நடவடிக்கைகளையே இந்த அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் மக்களுடைய எதிர்ப்பை காட்டும் முகமாக ஜனவரி 15ஆம் திகதி நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர்களுக்கு எதிராக ஐனவரி 13 ஆம் திகதி கறுப்புக் கொடி போராட்டங்களை நடத்துவது தொடர்பில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடி வருகின்றோம்.
இது தொடர்பில் கலந்தாலோசித்ததன் பின்னர் இதன் இறுதி முடிவுகளை சில தினங்களில் நாங்கள் வெளியிடுவோம் எனவும் குறிப்பிட்டார்.