எமக்கெதிராக யுத்தக்குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கவில்லை -– ஜனாதிபதி
"யுத்தக்குற்றம்" தொடர்பான எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் எமக்கெதிராக இல்லை என்பதை நான் மிகவும் தெளிவாகக் கூறுவேன். ஆரம்பக் கட்டத் தில் யுத்தக்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருந்திருக்கலாம். ஆனால் ஜெனீவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எமக்கெதிராக எவ்வித யுத்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். மனித உரி மை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நோக்குமிடத்து, நாம் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் என்ற வகையில், அதன் முக்கிய விடயங்களையும் யோசனைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
இராணுவம் சர்வதேச மற்றும் தேசிய சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளது. ஒருவர் தவறிழைத்தமைக்காக முழு இராணுவத்தையும் குற்றம் சாட்ட முடியாது. தவறிழைக்கப்பட்டமை கண்டறியப்பட்டால் யாராகவிருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச தொலைக்காட்சியான அல்ஜஸீராவுக்கு புதிய அரசாங்கம், அதன் செயற்பாடுகள், பொறுப்புக்கூறல் தொடர்பாக வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அச்செவ்வியில் ஜனாதிபதி குறிப்பிட்ட முக்கிய விடயங்கள் வருமாறு,
வருடத்தின் முக்கியத்துவம்
எமது ஆட்சிக்காலத்தின் இரண்டாவது வருடம் பொருளாதார அபிவிருத்தியை இலக்காக கொண்டுள்ளது. எமது நாட்டில் வறுமை அதிகமாகவுள்ளது. மொத்த சனத்தொகையில் 22 சதவீதமானோர் போசாக்கு குறைபாடுடையவர்களாக உள்ளனர். அதேபோன்று 15 முதல் 17 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 7முதல் 8 சதவீதமானவர்கள் யுத்தத்தாலும், சுகாதார விடயங்களாலும் மாற்றுத்திறனாளிகளாகவுள்ளனர். ஆகவே இவற்றை மேம்படுத்த வேண்டும். அதனடிப்படையில் இந்த வருடத்தில் நாட்டின் வறுமையை ஒழித்து தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தேர்தல் காலத்தில் பத்து இலட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறியிருந்தோம். இந்த திட்டத்தின் பிரகாரம் அரச, தனியார் துறைகளில் அவ்வாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன. எமது வெளிநாட்டுக் கொள்கையின் பிரகாரம் அனைத்து நாடுகளுடனும் நாம் நட்புறவுகளைக் கொண்டுள்ளோம். அவ்வுறவுகளைப் பயன்படுத்தி எமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையே நோக்காக கொண்டிருக்கின்றேன்.
குடும்ப அரசியல்
முதலில் அந்த விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். முதலாவதாக எனது சகோதரரொருவர் டெலிக்கொம் நிறுவனத்தில் பதவியில் உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கும் குடும்ப அரசியல் என்ற விடயத்திற்கும் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. டெலிக்கொம் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் அரச மற்றும் தனியார் துறையும் உள்ளடக்கமாக செயற்படுகின்றது.
இந்நிறுவனமானது வேறு அமைச்சின் கீழ் உள்ளது. ஆகவே எனது சகோதரர் அரச நிருவாகத்தில் உள்வாங்கத்தில் உள்வாங்கப்படவில்லை. எனது மருமகன் தொடர்பாக கூறப்படுகின்றது. அவருக்கு எந்தவகையிலுமே அதிகாரமிக்கவொரு பதவி வழங்கப்படவில்லை. அவர் எனது தனிப்பட்ட செயலணியில் கடமையாற்றுகின்றார்.
எனது மகன் தொடர்பாகவும் கருத்து வெளியிடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகள் இடம்பெறும்போது நாடொன்றுக்கு குறிப்பிட்டளவு ஆசன ஒதுக்கீடுகள் காணப்படும். நாட்டின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகவே அவ்வாசனங்கள் அமையப்பெறும். ஆனால், அந்த ஆசன ஒதுக்கீட்டுக்குள் எனது மகன் இருக்கவில்லை. அதனை குடும்ப அரசியலாக கருதுவதை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.
இவ்வாறான விடயங்களில் அரசியலுக்கு அப்பால் சென்று பார்க்கப்படல் வேண்டும். நான் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் காணப்பட்ட நிலைமையை கருத்திற்கொள்ள வேண்டும். ஆகவே எனது எந்தவொரு அங்கத்தவரும் அரச நிர்வாகத்தின் எந்தவொரு புள்ளியிலும் நியமிக்கப்படவில்லை.
குற்றச்சாட்டுக்கள்
விமர்சனங்கள் எப்போதும் காணப்படும். அதனை தவிர்த்துவிட்டு யாராலும் செல்லமுடியாது. எனது மகன் அதில் பங்கெடுத்தமை யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது? நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா? என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை.
ஊழல் மோசடியாளர்களுடன் ஒப்பந்தம்
ஊழல் மோசடிகள் தொடர்பில் நான் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். காட்டுதார்பாரை நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஆட்சிக்கு வரவில்லை. சட்டம் ஒழுங்கை சரியாக நடைமுறைப்படுத்தவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். நல்லாட்சி என்பதை சொல்லளவில் மாத்திரமன்றி அவ்வாறே செயற்படுத்துவதே எமது நோக்கமாகும். ஆகவே ஊழல்மோசடிகள் தொடர்பில் சட்டத்தை உரிய வகையில் பயன்படுத்துவோம்.
அவற்றை விசாரணை செய்யும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஊழல்மோசடி விசாரணை பிரிவு மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவை சுயாதீனமாக இயங்கும் ஆணைக்குழுக்களாகும். இவற்றில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதில்லை. ஆகவே அந்த அதிகாரிகளுக்கு தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கவேண்டும்.
மந்தகதியில் விசாரணை
விசாரணைகள் பக்கச்சார்ப்பற்ற வகையில் ஒருபடிமுறையாக முன்னெடுக்கப்படவேண்டும். அந்த நடவடிக்கைகளே தற்போது இடம்பெறுகின்றன. பழிவாங்கும் எண்ணத்துடன் சட்டத்தை எவர் மீதும் பிரயோகிக்க முடியாது. விசாரணைகள் செய்யும் அதிகாரிகள் உரியவகையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் அந்த அதிகாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குழப்பமடையவேண்டிய தேவையில்லை. மோசடிக்காரர்களையும், திருடர்களையும் பாதுகாக்கும் நோக்கம் எனக்கில்லை.
யாராக இருந்தாலும் எந்தக் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் அதிகாரிகள் தமது கடமையை நிறைவேற்றுவார்கள். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெறுபேறுகளை வெளிப்படுத்தும் ஆண்டாக 2016 அமையும் என்பதை மிகத்தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனவே விமர்சனங்கள் தொடர்பில் குழப்பமடையவேண்டியதில்லை.
போர்க்குற்றம்
ஒருவிடயத்தை மிகத்தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எமக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டில்லை. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களே எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்தக் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக்கொண்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஆகவே, அந்தக்கடப்பாட்டில் நாம் எமது நாட்டின் சுயாதீனத்தன்மையை பாதுகாத்தே செயற்படுகின்றோம். அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையிலேயே செயற்படுவோம். இதற்கு சர்வதேச தொழில்நுட்ப ஆலோசனைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வெளிநபர்களின் தேவை எமக்கு ஏற்படவில்லை.
பக்கச்சார்பற்ற வகையில் சுயாதீனமாகச் செயற்படக்கூடிய வகையில் நீதித்துறை, குற்றவிசாரணைப்பிரிவு மற்றும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்யக்கூடிய கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.
வாக்குறுதியில் பின்வாங்கல்
வாக்குறதிகள் பின்வாங்கப்படவில்லை. அவ்வாறு கூறுவதை. அவற்றை நான் நிராகரிக்கின்றேன். எந்தவகையிலும் வாக்குறுதியில் பின்வாங்கப்படவில்லை. நாட்டில் காணப்படுகின்ற சூழலை அறிந்துகொண்டு செயற்படவேண்டும். வேகமாக இந்த விடயங்களை கையாளமுடியாது.
விசாரணை ஊடாக நாட்டின் மீதுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவதே எமது நோக்கமாகவுள்ளது. இதற்காக உண்மைகளை அவ்வாறே கண்டறியப்படவேண்டும். குறிப்பாக பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து விலகமாட்டோம். எமது விசாரணைகள் பக்கச்சார்பற்ற தன்மையும், வெளிப்படையான தன்மையையும் கொண்டுள்ளன. அரசாங்கம் என்ற வகையில் இந்த விடயத்தில் நாம் நேர்மையாக நடந்துகொள்வோம்.
பரணகம ஆணைக்குழு
போர்க்குற்றங்களை எந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த அரசாங்கத்தினாலேயே பரணகம ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. அதனை ஆணைக்குழுவாக கொள்வதைவிட, காண்காணிப்பு குழுவாக செயற்பட்டுள்ளது. கடந்த ஐ.நா.தீர்மானங்கள் வெளிவந்ததன் பின்னரே அந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை.
போரின் இறுதி தருணங்கள்
அந்த அறிக்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. அது உத்தியோகபூர்வமான அறிக்கை அல்ல. பாராளுமன்றில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதற்கான காரணம், ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் பாரதூரமானவையென குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன்போது பரணகம அறிக்கையை சுட்டிக்காட்டி அதில் அதனை விட முக்கியமானவை குறிப்பிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டினோம். அங்கு இந்த அறிக்கையை உத்தியோக பூர்வமானதாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அந்த அறிக்கையின் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோக பூர்வமானதெனக் கூறவில்லை. ஏனென்றால் அந்த விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டியதன் தேவை காணப்பட்டது.
உத்தியோகபூர்வமானதில்லையா?
எமது அவதானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மீதே முக்கியமாக காணப்பட்டன. அரசாங்கம் அதற்கு எவ்வாறு பதிலளிப்பதென்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது.
புலிகள், இராணுவம்
இந்த யுத்தத்துடன் இலங்கை இராணுவம் மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. பயங்கரவாதிகளும் தொடர்பு பட்டிருந்தனர். புலிகளினால் வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும் அது பாரிய குற்றமாகும். விடுதலைப் புலிகள் அனைத்து சந்தர்ப்பத்திலும் சர்வதேச சட்டங்களை மீறியே செயற்பட்டிருந்தனர். இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டும் தேசிய சட்டத்தின் அடிப்படையிலுமே செயற்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கை இராணுவத்தினைச் சேர்ந்தவொருவரால் குற்றமிழைக்கப்பட்டதா என்பதைக் கண்டறியவே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தவறிழைக்கப்பட்டிருந்தால், அதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஏற்கனவே கூறியுள்ளோம். அந்த தவறை யார் இழைத்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவர் குற்றமிழைத்தமைக்காக முழு இராணுவத்தையும் சாடமுடியாது. ஏனென்றால் அரசாங்கத்தினால் அவ்வாறான குற்றமிழைப்பதற்கான கட்டளைகள் வழங்கப்படவில்லை.
ஆகவே, விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது அனைவராலும் சாட்சிகளை வழங்குவதற்கு முடியும். அதன்பிரகாரம் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
குற்றவாளிகள் யார்?
குற்றவாளிகள் யார் என்பதை தற்போது கூறமுடியாது. அதற்காகவே தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைக்கு அப்பால் சென்று யார் மீதும் எம்மால் குற்றம் சுமத்தமுடியாது.
தேசிய நல்லிணக்க பொறிமுறை
தேசிய நல்லிணக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது போன்று அதனை செயற்படுத்துவதென்பது எளிதான விடயமல்ல. 26ஆண்டுகளுக்கு அதிகமான காலமாக நாட்டில் யுத்தத்தினால் வடக்கு, தெற்கு மக்களுக்கிடையில் பாரிய சந்தேகம் காணப்படுகின்றது. எனவே, மக்களின் இதயங்களை ஒன்றிணைக்கவேண்டும். இதனை இருப்புகள், செங்கற்கள், சீமெந்துகளை வைத்துக்கொண்டு செய்யமுடியாது. எமது அரசாங்கம் யுத்தத்திற்கான காரணத்தை அதற்கான தீர்வினை பொறிமுறையூடாக முன்வைக்கின்றது.
மக்களின் சந்தேகங்கள் களையப்பட்டு நாட்டின் அனைத்துப்பகுதியிலும் எமது மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்படவேண்டும்.
வடக்கு நிலைமை
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூடிய முக்கியத்துவமளித்து செயற்பட்டு வருகின்றோம். கடந்த ஒருவருட காலத்தில் பல இராணுவ முகாம்களை அகற்றி, காணிகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம். அதேபோன்று 700 ஏக்கர் காணிப்பரப்பை மக்களுக்கு வழங்குவதற்காக அடையாளப்படுத்தியுள்ளோம்.
அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. உரியவர்களுக்கு காணிகளை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகின்றது. ஆகவே முப்படைகளின் தளபதிகளுக்கும் இந்தவிடயம் தொடர்பாக ஆலோசனை வழங்கியுள்ளோம். இந்த வருடம் ஜுன் மதத்திற்கு முன்னதாக மக்களின் அனைத்துக் காணிகளும் அடையாளம் காணப்படும். அதற்கான விசேட ஜனாதிபதி செயலணியொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம்
26 வருட யுத்தத்தின் பின்னர் அதாவது 2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதிக்கு பின்னரான 5 வருட காலப்பகுதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் காரணங்கள் கண்டறிந்து முன்னெடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கம் என்ற வகையில் அவ்வாறன பணிகளையே முன்னெடுக்கின்றோம். வடக்கு, தெற்கு உட்பட அனைத்து மக்களும் எமக்கு வாக்களித்து எம்மை ஆட்சிப்பீடமேற்றியுள்ளனர்.