கிளிநொச்சியில் 47 வீதமான காணி இராணுவத்தினரின் பாவனையில் - சிறிதரன் தெரிவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 47 வீதமான காணி இராணுவ பாவனையிலேயே உள்ளது. இதனால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே காணி உரிமையாளர்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒரு வருடத்திற்கு பின்னர் நேற்றுத் திங்கட்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் இ.அங்கஜன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் காணி, சுகாதாரம், வீடமைப்பு, கல்வி உட்படப் பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவில் அதிகரித்துக் காணப்படும் காணிப்பிரச்சினைகளுக்கு காணிக் கச்சேரி மூலம் தீர்வு காண உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் முன்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இராணுவ சின்னம் சீருடையில் பொறிக்கப்பட்டுள்ளமை குறித்தும் முன்பள்ளி ஆசிரியர்களை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இருந்து விடுவித்து ஒரு திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வேண்டுகையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
கரைச்சிப் பிரிவில் 8 ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு காணிக் கச்சேரி மூலம் உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டதாக கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் குறித்த கூட்டத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், கல்வி, சுகாதாரம், வீதி, விவசாயம், வாழ்வின் எழுச்சி,போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு, மின்சாரம், நீர்ப்பாசனம், கூட்டுறவு, மீன்பிடி, சுற்றாடல், கமநல சேவைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்கள் தங்கள் கிராமங்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைளை முன் வைத்தனர்.
இக்கோரிக்கைகள் அனைத்தும் கூட்டத்தில் செவிமடுக்கப்பட்டதோடு நின்று விட்டதாகவும் மதியம் 12 மணிக்கு கூட்டம் நிறைவு செய்யவேண்டும் என இணைத் தலைவரால் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை என மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர். மேலும் கல்வி விடயத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு தேவைகள் உள்ள போதும் வீதி அபிவிருத்தி, சமூர்த்தி விடயத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அதிகமாகவுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.