ஆறு மாதகால பதவிநீடிப்புக் கேட்கிறது பரணகம ஆணைக்குழு
காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஆறு மாதகால பதவி நீடிப்பைக் கோரவுள்ளது.
மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான இந்த ஆணைக்குழு தமது செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அனுமதி கோரியுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே, ஆறுமாத காலத்துக்கு ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து தாம் ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளதாகவும், ஆணைக்குழுவுக்கு பதவிக்காலத்தை நீடிப்பதா இல்லையா என்பதை அவர் முடிவு செய்வார் என்றும், எச்.டபிள்யூ.குணதாச குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்த ஆணைக்குழுவைக் கலைத்து விட்டு நம்பகமான ஒரு விசாரணை அமைப்பிடம், இதன் விசாரணைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.