Breaking News

ஜெனீவா தீர்மான விவகாரம் - இலங்கை வந்த ஐ.நா சட்டத்துறைக் குழு

ஜெனீவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சட்டத்துறை சார் குழுவொன்று கடந்தவாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக இந்தக் குழு ஆராய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்த இலங்கை அரசாங்கம், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக இந்தக் குழு அழுத்தங்களைக் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமாக பொறுப்புக்கூறல் விவகாரம் சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக அரசாங்கத் தரப்புடன் முக்கியமான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

வரும் ஜுன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், ஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துகிறதா என்பது குறித்த வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்று பேரவையினால் ஆணையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.