Breaking News

இரு முக்கிய அனைத்துலக உயர்மட்டப் பிரமுகர்களை எதிர்கொள்ளத் தயாராகிறது இலங்கை

அடுத்தமாதம் முதல் வாரத்தில் இரண்டு அனைத்துலக முக்கிய பிரமுகர்களை எதிர்கொள்வதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தயாராகி வருகிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜும், அடுத்த மாதம் 5ஆம் நாள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்கள் இருவருமே,இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்நிலைப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதுடன், வடக்கிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்திக்கவுள்ள இவர்கள், வடக்கு மாகாண முதலமைச்சருடனும் கலந்துரையாடவுள்ளனர். இந்திய – இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்துக்காக இரண்டு நாள் பயணமாக கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

அதேவேளை, கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்ற பின்னர், செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.இந்தப் பயணத்தின் போது, அவர் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.