தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்குரிய விடை இன்னமும் கிடைக்கவில்லை!
முப்பது ஆண்டு அகிம்சைப் போராட்டமும், முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டமுமாக மொத்தமாக 60ஆண்டுகள் துன்பங்களுடன் காத்திருந்தும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு உரிய விடை இன்னமும் கிடைக்கவில்லை. உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய அரசியல் யாப்பும் சரியான தீர்வை வழங்கும் என்பதற்கான சாதகமான நிலையும் தென்படவில்லை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
60ஆண்டு காலம் மனம் தளராமல் இருக்கும் மக்களை இன்னும் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வைக்காமல் அவர்களின் அரசியல் உரிமைகளை கையளிக்கும் ஏற்பாடுகளுக்கு உலக அரசியல் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2009ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் முடிந்துவிட்டது என மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மார்புதட்டியது போன்று நல்லாட்சி அரசாங்கமும் புகழ்பாடுகின்றது. ஆனால் யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதற்கு நடைமுறை விடயங்கள் சான்றாகும். குறிப்பாக காணி அபகரிப்பு, பௌத்த சமயப்பரப்புரைகள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்தை குறைத்தல், இரணுவ கிராமங்களை உருவாக்குதல், தமிழர் பிரதேச எல்லைகளை சிங்கள பிரதேசங்களுடன் இணைத்து தமிழர்களை நிலத்தொடர்பில்லாமல் பிரித்தல், நில உரிமைகளை பறித்தல் என்று வடக்கு கிழக்கில் மறைமுக யுத்தம் தொடருகின்றது.
இலங்கையின் அரசியலமைப்பு தமிழர்களுக்கு சமநீதி வழங்கவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1883இல் முதன் முதலாக உருவாக்கப்பட்ட கோல்புறூக் அரசியல்யாப்பு முதல் இலங்கை 1948இல் சுதந்திரமடைந்து 1972இல் இறைமை அடைந்து உருவாக்கப்பட்ட யாப்புகள் வரை தமிழர்களுக்கு சமநீதி இல்லை என்பதும் வரலாறு. 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 19திருத்தங்களுடன் தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது. இந்த யாப்பில் 1987இல் செய்யப்பட்ட 13ஆவது திருத்தம் தான் அதிகாரப்பரவாலக்கல் முறையாகும் இதுதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாகவும் கூறப்பட்டது.
ஆனால் மக்களிடம் நம்பிக்கை இருக்கின்றது. நிரந்தர அரசியல் தீர்வுக்கான சர்வதேச ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இலங்கை ஒரு சிறிய நாடு அந்த நாடு தான் விரும்பிய நாடுகளுடன் உறவுகளை வைத்து தனக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்ற நல்ல நோக்கில் உலக நாடுகள் விட்டுக்கொடுப்பதை அல்லது பொறுத்துக்கொண்டிருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழர்களின் அரசியல் இருப்புக்கு உலை வைக்கின்ற வேலைத் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதை நிறுத்த, குறைந்த பட்சமேனும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இனப்பிரச்சினை விவகாரத்தில் முற்று முழுதாக அரசாங்கத்தை சர்வதேசம் நம்புகின்ற போக்கை காணமுடிகின்றது
பிராந்திய அரசியல் நலன் மற்றும் லாபங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தொடர்ந்து செயற்படுமானால் தமிழர்கள் பிரச்சினைக்கு உலகம் அழியும் வரை தீர்வுகிட்டாது. இந்தியா அயல்நாடு இந்திய தமிழர் பிரச்சினையை பார்த்துக்கொள்ளும் என்று கருதியும் உலக நாடுகள் செயற்படுமானால் அது இன்னும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் அல்லது தள்ளப்பட்டு விட்டது என்றும் கூறலாம். ஆகவே இந்த நிலைமைகளை அறிந்துகொண்டு நேர்மையான முறையில் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் என்ற கருத்துக்களை தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்து முன்வைக்க வேண்டும்.
அதற்கு ஏற்றவாறு மக்கள் சந்திப்புக்களை நடத்த வேண்டும். தொழிற் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசணை பெறுகின்றனர். அதையும் தாண்டி அரசாங்கமும் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் மக்கள் சந்திப்புகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. தமிழ் மக்கள் பேரவை கூட மக்களை சந்தித்து உரையாடவில்லை. மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் வடக்கு கிழக்கில் இல்லை. ஆனாலும் தமிழ்த்தேசிய கொள்கையும் நம்பிக்கையும் மக்களிடம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள்தான் கொள்கைகளை விலைபேசி இலாபம் ஈட்டுகின்றனர் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.