ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
இயற்கைக்கும் மனிதர்களுக்குமிடையிலான வலிமையான உறவைக் குறிக்கும் ஒரு உயர்ந்த பண்டிகையே தைப்பொங்கல் பண்டிகை என ஜனாதிபதி வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிகப்பட்டுள்ளதாவது;
மக்கள் தம்மைப் போசிக்கும் இயற்கை அன்னைக்கும் இயற்கையின் தனிப்பெரும் சக்தியான சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்துவதைக் குறித்து நிற்பதன் காரணமாக இப்பண்டிகை பெருமிதத்துடன் கொண்டாடப்படுகிறது.
மானிடப் பரிணாமக் காலம் முதல் விவசாய சமூகத்தினர் இத்தகைய பண்டிகை நிகழ்வுகளை ஐக்கியம் மற்றும் பரஸ்பர மதிப்புணர்வுடனும் பொது சமூகப் பெறுமானங்களைப் பேணியும் கொண்டாடி வந்துள்ளனர்.
இயற்கையுடன் தொடர்புடைய இத்தகைய பண்டிகைகளைக் கெண்டாடுவது இப்பூவுலகை மனிதன் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக ஆக்குவதற்கு பெரிதும் பங்களிப்புச் செய்கிறது. இயற்கையை புனிதமாக மதித்து,சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் உதவும் பாரம்பரிய மரபுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டியது இன்று எம்மீதுள்ள பொறுப்பாகும்.
தேசிய அடையாளமும் மாசற்ற கலாசார மரபுரிமைகளும் தைப்பொங்கல் போன்ற இத்தகைய பண்டிகைகளில் மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இப்பண்டிகை எத்தகைய மாற்றங்களும் திரிவுகளுமின்றி பழங்காலப் பண்புகெடாமல் தொடர்ந்திருப்பது இதன் மிகப்பெரும் சிறப்பாகும்.
இன்றைய தினம் பொங்கிப்பிரவாகிக்கும் பாட்குடத்தைப் போன்று ஒருவர் மற்றவர் மீதான மானிட அன்பும் எம்மக்களின் உள்ளங்களில் பொங்கிப் பிரவாகிக்கவும், ஏற்றப்படும் ஒளி விளக்குகள் இருளை நீக்கி உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கவும் எனது பிரார்த்தனைகள்.
உங்கள் எல்லோருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
– ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன –