தேர்தலுக்கு முன்பாகவே மீண்டும் சிறைக்குச் செல்வார் முதல்வர் ஜெ.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதை இல்லை என்று மறுத்து விட முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தினசரி விசாரணையைத் தொடங்கவுள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமான நிலையே காணப்படுகிறது.
ஜெயலலிதா மீண்டும் சிறைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே அவர் சிறைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதை நடக்காது என்று மறுக்க முடியாது. இப்படி பாதகமாக நிலைமை உள்ள போதிலும் தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலையிலும் கூட இனிமேல் ஊழலில் ஈடுபடக் கூடாது என்று இவர்கள் நினைக்கிறார்களா என்றால் இல்லை. அந்த எண்ணமே அவர்களிடம் இல்லை. ஆனால் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் ஊழலற்ற கூட்டணியை மக்கள் நலக் கூட்டணி அமைக்கும், ஊழலற்ற ஆட்சியையும் அமைக்கும்.
தமிழகத்தில் ஊழலே இல்லாத பொது அரசு அமைய வேண்டும் என்பதே மக்களின் ஒரே குறிக்கோள். அதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். தமிழக வாக்காளர்களில் 65 சதவீதம் பேர் எந்தக் கட்சியையும் சாராதவர்கள். அவர்களின் வாக்குகள் எங்களுக்குக் கிடைக்கும் என்றார்.