நான் தோல்வியடைந்தவன் அல்ல! திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டவன் - சுரேஷ்
நான் நிராகரிக்கப்பட்டவன் அல்லது மக்கள் என்னை தோல்வியடையச் செய்தனர் என்று சொல்வதை என்னால் ஒருநாளும் ஏற்றுகொள்ள முடியாது. நான் தோல்வியடைந்தவன் அல்ல. திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டவன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நான் தோல்வியடைந்தவன் அல்ல. எனது வாக்குகள் திருட்டுத் தனமாக எடுக்கப்பட்டன.
உங்களுக்கு நடந்த அநீதிக்காக நீங்கள் நீதிமன்றம் சென்றிருக்கலாம் தானே என்று யாராவது கேட்கலாம். இவ்வாறான வழக்குகளுக்கு நீதிமன்றம் சென்றால், அடுத்த தேர்தலும் வந்து விடும். அதேபோன்று அடுத்தவர்களிடம் கடன் வாங்கி நீதிமன்றம் போக வேண்டிய தேவை எனக்கு இல்லை.
நாங்கள் வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்கிறோம், தமிழ் மக்களுக்கு இனியும் கலவரங்கள் வரக்கூடாது என்று சொல்லுகின்றோம், தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்று சொல்லுகின்றோம். இப்படி சொல்லும் நாங்கள் எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்?
இவற்றைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்து வந்தது. உரிமைகளைக் கேட்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றால், சம்பந்தனும் தீவிரவாதியாக இருக்க வேண்டும், சுமந்திரனும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டார்.