வலி.வடக்கில் இராணுவ முகாமிற்குள் இரகசிய வதைமுகாம்
அதியுயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து இராணுவத்தினரால் சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சித்திரவதை முகாமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வீட்டின் சீலிங், முட்கம்பிகளினால் வேயப்பட்டுள்ளது. இதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்குச்சென்று திரும்பியோர் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் இராணுவத்தினரின் பயிற்சி முகாம் ஒன்று இருந்துள்ளது. அந்தப் பயிற்சி முகாம் அங்கிருந்த வீடுகளை உடைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன், சில வீடுகள் இராணுவத்தினரின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு இராணுவத் தேவைக்கு பயன்படுத்தப்பட்ட வீடுகள் தற்போது எஞ்சியுள்ளன.
எஞ்சியுள்ள வீடொன்றின் அறையானது, வதை முகாம் எனச் சந்தேகிக்கும் வகையில் அமைந்துள்ளது. கூரைப்பகுதியில் முட்கம்பி கொண்டு வேயப்பட்டுள்ளன.
இதே அமைப்பிலான வதை முகாம் ஒன்று வரணிப் பகுதியில் அமைந்திருந்தஇராணுவ முகாமில் காணப்பட்டதாகவும், இராணுவம் அங்கிருந்து சென்ற பின்னர் அதனைத் தான் கண்டதாக தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.