தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது அறிக்கை 30ம் திகதி
அரசியல் தீர்வு சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்ட தீர்மானங்களின் முதலாவது அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படுமென, தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவின் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவின் கன்னி அமர்வு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமாகியது. இதன் பொருட்டு பிற்பகல் 03.30 அளவில் நல்லூர் ஆலயத்திலும் அதனைத் தொடர்நது யாழ். மரியன்னை பேராலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. சுமார் மூன்று மணித்தியாலயங்கள் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் இரவு 07.00 மணியளவில் நிறைவடைந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார்.
அத்துடன் தீர்வு திட்டங்களை முன்வைப்பதற்கான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதுடன், 30ம் திகதி முதல் அறிக்கை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் கையளிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு திட்டங்களை முன்வைப்பதற்கு பல்வேறு நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், மார்ச் மாதம் இறுதி அறிக்கைகள் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல் யாப்பு மற்றும் தீர்வுத் திட்டங்கள் குறித்த கருத்துக்களை தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும், அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையினால், முகவரி ஒன்று வெளியிடப்படும் அந்த முகவரிக்கு கருத்துக்களை அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவில்லை. எதிர்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளிக்கையில், முதலாவது அறிக்கையில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்ற அறிக்கை வந்த பின்னர். 2 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் யார் யாருடன் பேச வேண்டுமோ அவர்களுடன் எல்லாம் பேசப்படும் என்றார்.