தமிழ் மக்கள் பேரவை - காலத்தின் தவிர்க்க முடியாத பிரசவம்
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை தலைவராகவும் இருதய நோய் வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன், மட்டக்களப்பு தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதி வசந்தராசா ஆகியோரை இணைத்த தலைவர்களாகவும் கொண்டு தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு பிறப்பெடுத்திருக்கின்றது.
தனித்த அரசியல்வாதிகளை மட்டும் கொண்டிராமல் சிவில் சமூக அமைப்புக்களையும் இணைத்த ஒன்றாக இது உருவாகியிருக்கிறது. இத்தகைய அமைப்பு தமிழ் அரசியலுக்கு புதிது தான். ஆனால் காலத்தின் தேவைக்கு ஏற்ப இது தவிர்க்க முடியாத ஒன்றென்றே கூற வேண்டும்.
தற்போது தமிழ் மக்களுக்கு தேவையானது தேர்தலில் கூத்தடிக்கும் அரசியற் கட்சிகளல்ல. மாறாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் கையாளக்கூடிய தேசிய அரசியல் இயக்கமே. தேர்தலில் ஈடுபடுகின்ற அரசியற் கட்சிகள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றன. தமது தனிப்பட்ட நலன்களுக்காகவும் கட்சி நலன்களுக்காகவும் கொள்கைகளை விட்டுக்கொடுத்து சமரசத்தை நாடுகின்றன.
அண்மைய காலங்களில் இதுவே நடந்துள்ளது. தமிழ் அரசியல் தலைமை கட்டம் கட்டமாக தமிழ்த் தேசிய அரசியலை கீழிறக்கி இருக்கின்றது. இந்தியாவினதும், அமெரிக்காவினதும் பூகோள நலன் சார்ந்த நிகழ்ச்சித் திட்டத்தில் தமிழ் மக்களினது நலன்களையும் இணைப்பதற்கு பதிலாக அவற்றிடம் மறைமுகமாக தனிப்பட்ட சலுகைகளை மட்டும் பெற்றுக்கொண்டு பின்னால் செல்கின்றது. தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கைவிட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியலை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தேர்தல் அரசியல் சாராத அரசியல் இயக்கம் அவசியமாகின்றது.
தமிழ் அரசியல் தலைமை முதலாம் கட்டத்தில் தமிழ் அரசியலிலிருந்து புலி நீக்கம் செய்து கொண்டது. இதன் காரணமாக புலிசார்புடையவர் என அடையாளம் காணப்பட்ட கொள்கை ரீதியாக உறுதியாக நின்றவர்கள் வெளியேற்றப்பட்டனர் அல்லது வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இரண்டாம் கட்டத்தில் தமிழ் அரசியலிலிருந்து தமிழ்த் தேசிய அம்சங்கள் நீக்கம் செய்யப்பட்டன.
சிங்கக் கொடி ஏற்றுதல், சுதந்திர தினத்தில் பங்கு கொள்ளுதல் என்பன இந்த வகையிலேயே மேற்கொள்ளப்பட்டன. இங்கு சிங்கக் கொடி என்பது தமிழ் மக்களை ஒரு சமத்துவமான தேசிய தினமாக ஏற்காத கொடி என்பதையும் சுதந்திர தினம் என்பது இலங்கை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றிய தினம் என்பதையும் தமிழ் அரசியல் தலைமை கணக்கெடுக்கவில்லை.
மூன்றாவது கட்டத்தில் கட்சிக்குள்ளே உட்கட்சி போராட்டம் நடாத்தியவர்கள் ஒதுக்கப்பட்டனர். அவர்களுடைய அரசியல் தொடர்ச்சி திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டது. அனந்தி தொடக்கம் பேராசிரியர் சிற்றம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடாக வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வரை இப்போக்கு தொடர்ந்தது.
நான்காவது கட்டத்தில் தமிழ் மக்களினது அபிலாசைகள் எதுவும் தீர்க்கப்படாத நிலையில், அதற்கான உத்தரவாதம் எதுவும் வழங்கப்படாத நிலையில் நல்லிணக்கம் என்ற பெயரில் சரணாகதி அரசியல் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாத இலங்கை அரச அதிகாரக் கட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றதோடு தமிழ் மக்களின் நலன்களைக் கவனத்தில் எடுக்காத வரவு செலவுத் திட்டத்திற்கும் கை உயர்த்தப்பட்டது. இந்த இணக்க அரசியலினால் குறைந்த பட்சம் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை. வவுனியா அரசாங்க அதிபரை மாற்ற முடியவில்லை. நயினாதீவு பெயர் மாற்றத்தை தடுக்க முடியவில்லை.
ஐந்தாவது கட்டத்தில் தமிழ் அரசியலின் சர்வதேச மய நீக்கம் செய்யப்படுகின்றது. இணக்க அரசியலின் மூலமும், போர்க் குற்றம் தொடர்பாக உள்ளக விசாரணைக்கு சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த சர்வதேச மய நீக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் தேசிய சர்வதேச மயப்படுத்தல் என்பது இதுவரை காலம் உயிர்த் தியாகம் நிறைந்த போராட்டம் மூலமே ஏற்படுத்தப்பட்டது. இன்று அத் தியாகங்கள் அனைத்தும் கொச்சைப்படுத்தப்படுகின்றன.
தமிழ் அரசியல் தலைமையின் இப்போக்கினால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட்டன. அதில் முதலாவது தமிழ் தேசிய அரசியல் செங்குத்தாக கீழிறக்கப்பட்டமையாகும். மகிந்தவினால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்க முடிந்ததே தவிர, தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க முடியவில்லை. தற்போது இந்த அழிப்பு நடவடிக்கை நம்மவரைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது. சூழ்ச்சிகள் நிறைந்த பல்வேறு தந்திரோபாயங்கள் மூலமும் கோட்பாடுகள் மூலமும் இவை மேற்கொள்ளப்படுகின்றன. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். தமிழ் தேசிய அரசியல் தணலை தொடர்ந்து தக்கவைத்தல் தான் எதிர்காலத்திலாவது தமிழ் மக்களுக்கேற்ற அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் பேரவை - காலத்தின் தவிர்க்க முடியாத பிரசவம்
இரண்டாவது ஆபத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தத்துடன் சுருக்கிக் கொண்டமையாகும். தமிழ் அரசியல் தலைமை வாக்குப் பறிப்புக்காக என்ன தான் சமாதானத் தீர்வு எனக் கூறிக் கொண்டாலும் நடைமுறையில் 13வது திருத்தத்தை அரசியல் தீர்வாக ஏற்றுக்கொண்டுவிட்டது. சர்வதேச இராஜதந்திரிகள் இதனை நேரடியாக கூறத் தொடங்கிவிட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூட தமிழ் அரசியல் தலைமையின் சமஸ்டிக் கோரிக்கை என்பது வெறும் வாக்கு வேட்டைக்கான கோஷம் எனக் கூறியிருந்தார்.
இங்கு இனப்பிரச்சினை என்பது தமிழ் தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்படுகின்ற பிரச்சினையே! அதாவது தமிழ்த் தேசத்தை தாங்கும் தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பன அழிக்கப்படுவதனால் ஏற்படுகின்ற பிரச்சினையே. தமிழ் மக்களின் இதுவரை கால போராட்டம் என்பது இந்தத் தூண்கள் அழிக்கப்படுவதனை தடுப்பதற்கான போராட்டமே.
எனவே இதற்கான அரசியல் தீர்வு என்பது தமிழ் தேசத்தை அங்கீகரிப்பது என்பதாகவே இருக்க வேண்டும். இதன் நடைமுறைச் சட்ட வடிவம் வட-கிழக்கு என்கின்ற தமிழ் தேசத்தின் நிலத் தொடர்ச்சியை ஏற்றுக்கொள்ளுதல், சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுதல் சிங்கள தேசத்துடன் சமத்துவமான கூட்டை எற்றுக்கொள்ளுதல், சுயநிர்ணய உரிமைக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுத்தல் என்பதாக இருக்க வேண்டும். தமிழ் அரசியல் தலைமை இந்தக் கோட்பாட்டு அடிப்படைகளைப் பற்றி கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை.
மூன்றாவது இயல்பு நிலைமையைக் கொண்டு வருதலில் கவனம் செலுத்தாமையாகும். சிங்கள மக்களைப் பொறுத்தவரை போரில்லா நிலை மட்டும் சமாதானமாக இருக்க முடியும். ஆனால் தமிழ் மக்களுக்கு இது மட்டும் சமாதானத்தைக் கொண்டு வராது. போரில்லா நிலை, இயல்பு நிலையைக் கொண்டு வருதல், அரசியல் தீர்வு ஆகிய மூன்றும் இடம்பெறும் போதே தமிழ் மக்களுக்கு சமாதானம் ஏற்படும். இங்கு இயல்பு நிலையைக் கொண்டு வருதல் என்பது மிகவும் முக்கியமானது.
இதில் காணிப் பறிப்பைத் தடுத்தல், சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்தல், தமிழ்த் தேச நிர்வாகத்தில் சிங்கள நிர்வாகிகள் நியமிக்கப்படுதலைத் தடுத்தல், இராணுவத்தை அகற்றுதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், காணாமல் போனோர் பிரச்சினைக்கு நீதி காணுதல், திட்டமிட்ட இன அழிப்பிற்கு நீதி காணுதல், போரினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் போராளிகளின் நலன்களைப் பேணுதல், தமிழ்த் தேசம் திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துதல் போன்றன அடங்குகின்றன.
இவற்றையெல்லாம் சிங்கள ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் அரசாங்கங்கள் வலுவான அழுத்தங்களின்றி மேற்கொள்ளப் போவதில்லை. சிங்கள அரசாங்கங்கள் இவற்றையெல்லாம் தங்கத் தட்டில் வைத்து தரப்போவதில்லை என நோர்வே சமாதானத் தூதுவர் சொல்ஹெய்மே கூறியிருக்கின்றார். மக்களை இணைத்த தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமும் வலுவான சர்வதேச அழுத்தங்கள் மூலமுமே இவற்றைச் சாத்தியமாக்க முடியும்.
தமிழ் அரசியல் தலைமை இதற்கான போராட்டங்களை நடாத்துவதில்லை. இவ்விவகாரங்களை சர்வதேச மயப்படுத்துவதற்கான போதிய அக்கறை காட்டுவதில்லை. தாங்கள் போராட்டங்களை முன்னெடுக்காவிட்டாலும் தானாக உருவாக்கிய போராட்டங்களையாவது வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனால் இதற்கு மாறாக இவற்றை முடக்கவே முயற்சித்தன.
தமிழ் அரசியல் கைதிகள் தாங்களாக போராட்டத்தை ஆரம்பித்தபோது அதனை வளர்த்தெடுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பதிலாக தமிழ் அரசியல் தலைமை அரசாங்கத்திற்கும் கைதிகளுக்கும் இடையே நடுவராக பணியாற்ற முயற்சித்தது. பொய்யான உத்தரவாதங்களை வழங்கி போராட்டத்தை முடக்கியது. இரண்டாவது தடவை கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்தபோது நடுவராக நின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் அவுஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் தப்பி ஓடினர். இதேபோல வலிகாமம் வடக்கு மக்கள் காணிப் பறிப்புக்கு எதிரான போராட்டத்தை தாமாக மேற்கொண்டபோது நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதாகக் கூறி ஓர் அரசியல் விவகாரத்தை சட்ட விவகாரமாகக் சுருக்கினர்.
தமிழ் அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள், போராளிகள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என்போரின் நலன்களைப் பேணுவதற்கான விஞ்ஞானபூர்வமான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அவர்கள் முற்றிலும் கவனிக்கப்படாதவர்களாக விடப்பட்டனர். இவர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் காரணமாகவே பல துன்பச் சுமைகளை சுமக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள். அவர்களினால் தனித்து இந்தச் சுமைகளைச் சுமக்க முடியாது. இவற்றை சமூகம் பொறுப்பெடுக்க வேண்டும். அதற்கு முதலில் அரசியல் தலைமை பொறுப்பெடுக்க வேண்டும். தமிழ் அரசியல் தலைமை இதில் எந்தவித கவனத்தையும் செலுத்தவில்லை.
நான்காவது அர்ப்பணமும், தியாகமும் நிறைந்த தமிழ் அரசியலை கட்டியெழுப்பப்படுவதற்கு பதிலாக சுகபோக அரசியல் கட்டியெழுப்பப்படுகின்றமையாகும். இதனால் பிரக்ஞைபூர்வ அரசியல் சக்திகள் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்ல, சுகபோக அரசியல் சக்திகள் இந்த வெற்றிடத்தை நிரப்புகின்றனர். தமிழ் அரசியல் இன்று வருமானத்தையும் வசதி வாய்ப்புக்களையும் தரும் தொழிலாக மாறி வருகின்றது. இதுவரை கால போராட்ட வரலாற்றுடன் தொடர்புகள் இல்லாதவர்கள் பிழைப்புக்காக தமிழ் அரசியலை நாடுகின்றனர். எதுவித கடின உழைப்புகளும் இன்றி நேற்று தீர்மானித்து இன்று தலைவராகும் நிலை தோன்றுகின்றது.
மேற்கூறிய ஆபத்துக்களைத் தடுக்கத்தான் தேர்தல் அரசியலுக்கு அப்பாலான ஒரு அரசியல் இயக்கம் தேவைப்பட்டது. இந்த இயக்கம் பற்றிய சிந்தனை இன்று ஏற்பட்டதல்ல. எழுபதுகளிலேயே இந்தச் சிந்தனை உருவாகியிருந்தது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களின் விடுதலைக்காக செயற்படுகின்ற அமைப்புத் தோற்றம் பெறவேண்டும் என்ற நிலையில் தான் 1973இல் தமிழ் இளைஞர் பேரவையும் 1975இல் தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் உருவாகின.
1980களில் இச்சிந்தனை தமிழ்த் தேசிய சபை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்பதாக வளர்ந்தது. ஆனால் இயக்க அரசியல் போட்டி அதற்கான இடத்தைக் கொடுக்கவில்லை. ஆயுதப் போராட்டம் முடிவடைந்தiதைத் தொடர்ந்து தமிழ் சிவில் சமூகம் இதற்கான முயற்சிகளில் இறங்கியது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் இது விடயத்தில் அதிக அக்கறை காட்டினார். ஆனாலும் தமிழ் அரசியல் தலைமை இதில் போதிய ஆர்வமாக இருக்கவில்லை. அந்த முயற்சி தானாகவே கிடப்பிற்கு சென்றது.
இன்று தமிழ் அரசியல் பல்வேறு ஆபத்துக்களைச் சந்தித்த நிலையில் இந்தச் சிந்தனை கைகூடியிருக்கின்றது. தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என தமிழ் மக்கள் பேரவை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கூடுமானவரை தமிழ் மக்களின் அனைத்துப் பிரிவினர்களையும் இணைத்து செயற்பட முயற்சிக்கின்றது. ஆற்ற வேண்டிய பணிகளை தெளிவாக அடையாளம் கண்டுள்ளது. இவ்வியக்கத்திற்கு முன்னால் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. அதேவேளை இவ்வியக்கத்தை கருவிலே சிதைக்கும் விஷமத்தனமான பிரச்சாரங்களும் இடம்பெறுகின்றன.
இவையெல்லாவற்றையும் தாண்டி இவ்வியக்கம் முன்னே செல்லுமா என்பது இவ்வியக்கம் தொடர்பாக தமிழ் மக்களின் பங்கேற்பு எவ்வாறு இருக்கின்றது, தமிழ் மக்கள் பேரவையின் நடைமுறைச் செயல்திறன் ஆக்கபூர்வமானதாக இருக்குமா என்பவற்றில் தான் தங்கியிருக்கின்றது.