Breaking News

யாழ். தேசிய பொங்கல் விழாவுக்கு அகில இலங்கை இந்துமாமன்றம் எதிர்ப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவை ஏற்க முடியாது என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகளுக்குப் பதிலாக நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும், அகதி வாழ்க்கை வாழும் மக்களுக்கு நிரந்தர இல்லமும் வழங்குவதே அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறது.

இந்த நிலையில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, அங்கு நடைபெறும் பூஜை வழிபாடுகளிலும் பொங்கல் விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிகிறோம்.மானிடர்களை வாழவைக்கும் சூரிய சக்தியாகத் தோன்றும் இறைவனுக்கு நன்றி செலுத்தி வழிபாடு செய்யும் தினமாகவே தைப்பொங்கலை எமது மக்கள் அனுஷ்டிக்க வேண்டும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்கள் அனுபவித்துவரும் சோதனைகளையும், வேதனைகளையும் கருத்திற்கொண்டு தைப்பொங்கல் தினத்தை வழிபாட்டுத் தினமாக அனுஷ்டிக்குமாறும், எவ்வித கொண்டாட்டங்களையும் தவிர்க்குமாறும் அகில இலங்கை இந்து மாமன்றம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

நல்லாட்சி அரசங்கத்தின் கீழ் ஒரு சில நன்மையான விடயங்கள் எமது மக்களுக்கு கிடைத்தாலும் இன்னும் எம்மக்களில் சிலர் அரசியல் கைதிகளாகத் தொடர்ந்தும் சிறையில் வாடுவதும், இடம்பெயர்ந்து தமது வாழ்விடங்களை விட்டு முகாம்களில் வாழ்வதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இவை தொடர்பாக அரசாங்கம் திருப்திகரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பதை வருத்தத்ததுடன் தொரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.தற்போது வடக்கில் இடம்பெயர்ந்த 36 நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.

எனவே இந்த நில மாற்றமடைந்து முகாம் மக்கள் சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கும், சிறையில் வாடுகின்ற எம் இளைஞர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கவும் தைப்பொங்கல் தினத்தை இறைவழிபாட்டு நாளாக அனுஷ்டிக்க வேண்டுமே தவிர அதனை விழாவாக கொண்டாடுவதை நாம் ஏற்க முடியாது – இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.