திருமலை வழியான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் – இந்த ஆண்டு ஆரம்பம்
திருகோணமலை ஊடான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் இந்த ஆண்டில் செயற்படுத்த ஆரம்பிக்கப்படும் என்று, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த திட்டமே 2016ஆம் ஆண்டு செயற்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். முன்னதாக, வவுனியா, கிளிநொச்சி வழியாக வடக்கு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது.
எனினும், திருகோணமலைத் துறைமுகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி கருதியும், நிலங்களை சுவீகரிக்கும் வசதி கருதியும், திருகோணமலை, முல்லைத்தீவை இணைத்து, வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.