‘ஐரோப்பியாவில் என்ன பேசினேன்’ விமலின் நேரடி பதில்
ஐரோப்பிய நாடுகளில் பேசிய விடயங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ முகப்புத்தகம் ஊடாக நேரடியாக பதில் வழங்கவுள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி இவ்வாறு நேரடியாக பதில்களை வழங்கவுள்ளதாக அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எதிர்காலம் குறித்த சிந்தனையற்று இந்த தேசிய அரசாங்கம் செயற்படுவதாக குற்றம் சுமத்தும் அவர், அரசின் கொள்கைகளைக் கண்டித்து ஐரோப்பாவில் ஒருமாத காலம் தங்கி அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்ட நிலையில், நேற்று முன்தினம் இலங்கை திரும்பினார்.
இந்த நிலையில், ‘வெள்ளையர்களின் நீதிமன்றமும் நாட்டின் குற்றங்களும்’ என்ற தலைப்பில் இத்தாலி ஜேர்மனி இங்கிலாந்து உள்ளிட்ட 7 நாடுகளில் 14 இற்கும் மேற்பட்ட உரைகளை நடத்தியிருந்தார்.
இதன்போது, நல்லாட்சி அரசு இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், அரசின் இச்செயற்பாட்டைக் கண்டித்து ஐரோப்பா நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் அங்கு வலியுறுத்தியதாகக் கூறுப்படுகின்றது.
அவரது ஐரோப்பிய விஜயம் குறித்து பல விமர்சனங்களும் வினாக்களும் எழுந்துள்ள்ள நிலையில், இவ்வாறு எதிர்வரும் 5ஆம் திகதி நேரடியாக தெளிவுபடுத்தவுள்ளார்.
இதன்போது, ஒருமாத காலமாக உலகம் சுற்றியது எதற்காக?, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு தொடர்பில் என்ன கூறுகின்றனர்?, புதிய அரசின் வரவுசெலவுத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கவுள்ளார்.