Breaking News

மைத்திரி அரசு தமிழரை ஏமாற்றியுள்ளது - சிவாஜி குற்றச்சாட்டு

புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தபோதும் அந்த அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.


இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.நடைமுறை அரசாங்கம், தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் உரிய முனைப்புக்களை கொண்டிருக்கவில்லை.

அத்துடன் வடமாகாணசபை தமிழ் மக்களுக்கு உரிய சேவைகளை மேற்கொள்வதற்கான வழிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று அவர் குறைகூறியுள்ளார்.அரசாங்கம் பதவிக்கு வரும் முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பிட்ட சிலரே அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ளனர். படையினர் இன்னும் பல இடங்களில் பொதுமக்களின் இடங்களை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் உரிய முனைப்பை காட்டவில்லை.காணாமல் போயுள்ள சுமார் 30ஆயிரம் பேர் தொடர்பில் உரிய தகவல்கள் வெளிக்கொணரப்படவில்லை.

எனவே தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தி கொள்ளவில்லை என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு சென்று 6 மாதங்களுக்குள் இடம்பெயர்ந்துள்ள மக்கனின் பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்துள்ள போதும் அது சாத்தியமாகுமா? என்ற சந்தேகம் உள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்

அரசாங்கத்தை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. எனினும் ஐக்கிய நாடுகள் சபையை அரசாங்கத்தினால் ஏமாற்ற முடியாது என்றும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்