புத்தாண்டில் அரசு எதிர்கொள்ளப்போகும் மும்முனைச் சவால்! சமாளிப்பது எப்படி?
அரசியலில் அதிரடியான மாற்றங்கள் பலவற்றைக்கொண்டுவந்த 2015 ஆம் ஆண்டு விடைபெற்று 2016 ஆம் ஆண்டு உதயமாகியுள்ள இன்றைய நிலையில், புதிய வருடம் எவ்வாறு அமையப்போகின்றது என்ற கேள்வி எம் அனைவரிடமும் எழுகின்றது.
கடந்து சென்றுள்ள வருடத்தைப் போலவே புதிய வருடமும், பரபரப்பானதாக, அதிரடித் திருப்பங்களுடன் கூடியதாகவே இருக்கப்போகின்றது. அதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. குறிப்பாக, அரசியலமைப்பு மாற்றங்களுடன், இனநெருக்கடிக்கான தீர்வு, போர்க் குற்ற விசாரணை என்பன இந்தவருடத்துக்கான நிகழ்ச்சி நிரலில் முக்கியமானவை. இவை தமிழர்களுக்கு அக்கறையுள்ள விடயங்கள்.
இதனைவிட, கடந்த ஜனவரி 8 இல் மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தைக் கைப்பற்றிய போது கொடுத்த வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்படப்போகின்றது என்பதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் மற்றொரு விடயம்.
புதிய வருடத்துக்கான நிகழ்ச்சி நிரலைப் பொறுத்தவரையில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த “தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம்” மூன்று பக்கச் சவால்களைச் எதிர்கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இந்தச் சவால்கள் என்ன, அவற்றை அரசாங்கம் எவ்வாறு கையாளப்பேரின்றது என்பதையிட்டு இந்த வாரம் சுருக்கமாகப் பார்ப்போம்.
முதலாவது சவால்
மறுபுறத்தில் வேவ்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்வதில் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரகர் வீரர் வசிம் தாஜூதீன் கொலை, பத்திரிகையாளர் லசந்த விக்கரமநாயக்க படுகொலை, ரவிராஜ் எம்.பி. படுகொலை, பிரகீத் என்னெலியகொட காணாமல்போன விவகாரம் என்பன விசாரணைக்குள்ளாக்கப்பட்டடுள்ள போதிலும், ஒரு எல்லையைத் தாண்டி அந்த விசாரணைகள் செல்லவில்லை. ஒரு சிலர் கைதாகியுள்ள போதிலும், சூத்திரதாரிகள் இன்னும் வெளியேதான் உள்ளனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், சி.ஐ.டி.யினரால் அவர்களை இன்னும் நெருங்கிச் செல்ல முடியவில்லை. இதற்கும் தடைகள் போடப்படுகின்றதா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் மக்கள் மத்தியில் எழுகின்றது. ‘நல்லாட்சி’க்கு உறுதியளித்திருக்கும் அரசாங்கத்துக்கு இது பெரிதும் சங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உண்மைகள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருக்கின்றது. முக்கியமானவர்கள் விரைவில் கைதாவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரட்ண அடிக்கடி சொல்லிவருகின்றார். அரசாங்கம் துணிச்சலுடன் தமது விசாரணைகளை முன்னெடுத்தால் புதிய வருடத்தில் அதிரடித் திருப்பங்கள் மட்டுமன்றி, அதிர்ச்சிகளும் காத்திருக்கின்றது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்பாகக் கொண்டுவருவதுதான் அரசு எதிர்கொள்ளும் முதலாவது சவால்.
இரண்டாவது சவால்
அரசியலமைப்பு விவகார நிபுணரான அமைச்சர் ஜயம்பதி விக்கிரமரட்ண தலைமையிலான குழு ஒன்று இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு உதவி புரிந்துவருகின்றது. புதிய அரசியலமைப்பை அவர்கள்தான் தயாரிக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் தற்போதுள்ள அரசியலமைப்பு நிபுணரான பேராசிரியர் சூரி ரட்ணபால இது தொடர்பான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்துக்கு ஆலோசகராகப் பணிபுரிவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.
அரசியலமைப்பு மாற்றத்துக்காக அரசாங்கம் நீண்ட காலத்துக்குக் காத்திருக்காது எனச் சொல்லப்படுகின்றது. ஒரு வருட காலத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்துவிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்திருக்கின்றார்கள்.ஆனால், அவர்கள் சொல்வதைப்போல இது இலகுவான ஒரு பயணமாக அமைந்துவிடாது.
சட்ட மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்துக்களின்படி இந்த அரசியலமைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று அவசியமாகும். இனநெருக்கடிக்கான தீர்வையும் உள்ளடக்கியதாக அரசியலமைப்பு மாற்றம் அமையுமானால், சர்வஜன வாக்கெடுப்பின்போது இனவாதம் தாராளமாகக் கட்டவிழ்த்துவிடப்படலாம். அரசியலமைப்பு மாற்றம் என்பதை இலகுவாகச் சொல்லிக்கொண்டாலும், அது சவால் நிறைந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆக, அரசியலமைப்பு மாற்றம் என்பதுதான் அரசு எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய சவால்.
மூன்றாவது சவால்
அரசியலமைப்பு மாற்றத்துக்கான செயற்பாடுகளை முடுக்கிவிடும் அதேவேளையில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விடயத்திலும் அர்த்தமுள்ள நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்குள்ளது. இது தொடர்பில் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு அநுசரணை வழங்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பு இலகுவாகத் தட்டிக்கழித்துவிடக்கூடியதல்ல.
இவ்வாறு இணக்கம் தெரிவித்திருந்தாலும்கூட, அதனை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. உள்ளுர் விசாரணைப் பொறிமுறை குறித்தான தமது திட்டமொன்றை சர்வதேச சமூகத்துக்கும் அமெரிக்காவுக்கும் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே முன்வைத்திருக்கின்றது. அதனை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு. இருந்தாலும், இந்தத் திட்டம் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தென்னிலங்கை அரசியல்தான் அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என முன்வைக்கப்படும் எந்தவிதமான திட்டங்களும், தென்னிலங்கையில் தணலாக உள்ள இனவாதத்தைப் பற்றி எரியச் செய்யலாம்.
பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்காக சுதந்திரக் கட்சி என்பன இவ்விடயத்தில் இணைந்திருந்தாலும் கூட, ஐ.ம.சு.மு.வின் அதிருப்தியாளர்கள் கடும் தீவிரப் போக்குடன் இதனை எதிர்ப்பதற்குத் தயாராகவுள்ளார்கள். மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்தக் குழுவினரைப் பொறுத்தவரையில் தமது அரசியலுக்கு இதனைவிட அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை. நம்பகத் தன்மையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உருவாக்குவதற்கு உண்மையாகவே முயன்றால், தென்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டுவர வேண்டும்.
தென்பகுதி அரசியலைச் சமாளிக்க முற்பட்டால், அல்லது அதற்காகக் காத்திருந்தால் சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புக்களும் பொறுமையை இழக்கும் நிலை ஏற்படும். யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை கூட இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவே அமையப்போகின்றது. ஆக, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பது புதிய வருடத்தில் அரசு எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கப்போகின்றது.
புதிய வருடத்தில் அரசாங்கம் எதிர்கொள்ளப்போகும் பிரதான சவால்கள் இவைதான். இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது? அமைச்சரவையில் அடுத்த சில தினங்களில் ஏற்படப்போகும் மாற்றங்கள் இதற்கான தீர்வாக அமையுமா? இது போன்ற விடயங்களுடன் அடுத்த வெள்ளிக்கிழமை சந்திப்போம்!
-
நன்றி தமிழ் லீடர்