இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு - ராஜித கூறுகிறார்
கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல், இன ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் நாம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் இந்த ஆண்டிலும் தொடரும். அதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் பிரச்சினை தீரும் என அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இந்த ஆண்டு அரசாங்கத்தை நம்பி எம்முடன் கைகோர்த்தமைக்கு நாம் எப்போதும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். அதேபோல் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் தமிழ், முஸ்லிம் மக்களுடன் கைகோர்த்து செயற்பட தாயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டுக்குள் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுவது உறுதி என தமிழர் தரப்பு தெரிவித்துள்ள நிலையில் அரசாங்கம் எவ்வாறான வகையில் செயற்படும் என அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஆண்டு ஆரம்பம் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து ஆண்டுகளில் நாட்டையும் மக்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்தி நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு சென்ற மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்தி ஜனநாயக, மக்கள் நலன் பேணும் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். அதேபோல் நாட்டுக்கு எதிரான அழுத்தங்கள், சர்வதேச படையெடுப்புகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
கடந்த காலங்களில் பொருளாதார ரீதியிலும் வாழ்வாதார முறையிலும் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு பாரிய கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். ஆனால் புதிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் மக்களை பொருளாதார சுமையில் இருந்து காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளது. அவ்வாறான ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு மக்களுக்கு மிகவும் சிறந்த ஆண்டாக நிறைவடைந்துள்ளது.
அதேபோல் ஆரம்பமாகியுள்ள இந்த புது வருடம் கடந்த ஆண்டைப்போல மேலும் பல நன்மைகள் ஏற்படும் வகையில் அமையும் என்ற வாக்குறுதியை எம்மால் கொடுக்க முடியும். மூவின மக்களும் தமது உரிமைகளுடன் வாழக்கூடிய வகையில் நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றினையும் ஒரு ஆட்சியை எம்மால் முன்னெடுக்க முடியும். அதேபோல் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வளர்ச்சி கண்ட நாடாக இலங்கையை மாற்றும் நடவடிக்கைகளை பிரதான இரண்டு கட்சிகளின் தலைமைத்துவமும் மேற்கொள்ளும்.
குறிப்பாக கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் மற்றும் இன ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் நாம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் இந்த ஆண்டிலும் தொடரும். புதிதாக அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்தாலோசித்து வருகின்றன. ஆகவே புதிய அரசியல் அமைப்பில் நிச்சயமாக அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சி மாற்றத்தின் போராட்டத்தில் தமிழ் மக்கள் மிகப்பெரிய பங்காளர்களாக காணப்பட்டனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எம்மை நம்பி எம்முடன் கைகோர்த்தமைக்கு நாம் எப்போதும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். அதேபோல் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் தமிழ் முஸ்லிம் மக்களுடன் கைகோர்த்து செயற்பட தாயாராக உள்ளோம்.
கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இந்த அரசாங்கம் விடப்போவதில்லை. நாம் வடக்கு கிழக்கு மக்களை அக்கறையுடன் கவனித்து வருகின்றோம். அதேபோல் சிங்கள தமிழ் உறவையும் பலப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் பிரச்சினை தீரும். அதேபோல் நாட்டில் மூவின மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். அதை தொடர்ந்தும் தக்கவைப்போம் என அவர் குறிப்பிட்டார்.