யாழ் வருகிறார் சிவா பசுபதி
புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவில் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அங்கீகாரத்தை பேரவை வழங்கியுள்ளது. பேரவையின் முதலாவது கன்னி அமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது சிவா பசுபதியை சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரதிநிதியாக சிவா பசுபதி செயற்படுவார் என்றும் புதிய அரசியல் யாப்பில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்த சுயாட்சி தொடர்பான விடயங்களை சேர்ப்பது மற்றும் அதிகாரபகிர்வுகள் குறித்து உப குழுவின் ஏனயை உறுப்பினர்களுடன் சிவா பசுபதி கலந்துரையாடுவார் எனவும் பேரவையின் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை பேரவை உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று சிவா பசுபதி நேற்று சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் இருந்து கொழும்புக்கு வந்துள்ளார் என்றும் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்வார் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் கொடுமைகளை தீவிரத்தை குறைப்பதற்கு ஐயத்திற்கு இடமின்றி கண்காணிப்பு குழுவொன்றை அனுப்பவது குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் தீவிரமாக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது என சிவா பசுபதி வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.