மார்ச் இறுதியில் உள்ளக விசாரணை கட்டமைப்பு குறித்த இறுதி முடிவு - ராஜித தெரிவிப்பு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையின் பிரகாரம், அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவத்தை தயாரிக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளது.
மக்கள் மத்தியிலும் சிவில் சமூக பிரதிநிதிகள் மட்டத்திலும் இந்த ஆலோசனைகளும் கலந்துரையாடல்களும் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளக விசாரணை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். அதன்படி அரசாங்கம் ஏற்கனவே ஒரு அடிப்படை திட்டத்தை முன்வைத்துள்ளது. அந்த திட்டத்தின் பிரகாரமே மக்கள் மத்தியில் ஆலோசனைகளயைும் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளது.
அந்தவகையில் அரசாங்கம் தயாரித்துள்ள உள்ளக விசாரணை பொறிமுறை நான்கு பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. முதலாவதாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும். அதில் இரண்டு பிரிவுகள் இருக்கும். அதாவது மத தலைவர்களைக் கொண்ட ஒரு குழுவும் ஆணையாளர்களைக் கொண்ட ஒரு குழுவும் இயங்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இதன்மூலம் நீதியை பெறலாம். தென்னாபிரிக்காவின் ஆலோசனையுடன் இது முன்னெடுக்கப்படும்.
இரண்டாவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும். மூன்றாவதாக நீதிக்கான உரிமைக்காக நீதிமன்ற பொறிமுறை உருவாக்கப்படும். அடுத்ததாக இழப்பீடு பொறிமுறை உருவாக்கப்படும்.
இறுதியாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை போன்ற எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது இருக்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். இதுதான் அரசாங்கம் திட்டமிட்டுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பாக உள்ளது.
அந்தவகையில் இந்த அடிப்படைத் திட்டத்தை மக்கள் முன் வெளியிட்டு கலந்துரையாடல்களையும் ஆலோசனைகளையும் நடத்தி மார்ச் மாத இறுதியில் உள்ளக விசாரணைக் கட்டமைப்பு குறித்த இறுதி முடிவையும் எடுக்கவுள்ளது.
இது இவ்வாறு இருக்க உண்மையை கண்டறியும் ஆணைக்குழு குறித்த அனுபவங்களையும் பெறும் நோக்கில்ங அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று விரைவில் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அந்நாட்டின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளது.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகளைக்கொண்டு இலங்கை விசாரணை நடத்தவேண்டும் என்று அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் அலுவலகம், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதை மதிப்பீடு செய்வது அவசியம் என்றும் அமெரிக்க பிரேரணை வலியுறுத்தியுள்ளது.
இது இவ்வாறு இருக்க இலங்கை குறித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் அதில் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ளடங்குகின்ற கலப்பு நீதிமன்றத்தை அமைத்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது. ஆனால் பின்னர் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இந்த கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் எதிர்வரும் ஹுசேன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விஜயத்தின்போது அவர் வடக்குக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனையும் சந்தித்து பேச்சுநடத்தவுள்ளார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு முக்கியத்துவமிக்கதாக அமையவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.