புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் - கம்மன்பில ஆருடம்
தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பானது எமது நாட்டை பிளவுபடுத்துவதோடு இச்செயற்பாடானது நீண்டகால பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் என தூயமையான ஹெல உறுமயவின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமெரிக்கா உட்பட சில சர்வதேச நாடுகளுக்கு எமது நாட்டினை பிளவுபடுத்தும் நோக்கம் நீண்டகாலமாக இருப்பதோடு தேசிய நல்லாட்சி என்ற அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அந்நாடுகளுக்கு ஏற்றவாறே அமைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
புதிய தேசிய அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் திட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
கடந்த தேர்தல்களின் போது மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியதோடு அவை அனைத்தினையும் மறந்து இன்று நல்லாட்சி என்ற பெயரில் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபித்து மக்களை முற்று முழுவதுமாக ஏமாற்றும் முகமாகவே இந்த அரசாங்கமானது ஆட்சியினை முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் தேசிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பானது எமது நாட்டை பிளவுப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குறிப்பிட்ட இந்த அரசியலமைப்பில் உள்ளடக்கபடுகின்ற பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது எமது நாடு நீண்டக்கால ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சர்வதேச நாடுகளுடன் நல்லுறவுகளை மிகவும் சிறந்த முறையில் பேணுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக தெரிவிக்கும் இந்த அரசாங்கமானது மறுபுறம் அமெரிக்கா உட்பட சில சர்வதேச நாடுகளுகளுக்கு எமது நாட்டினை பிளப்படுத்தும் நோக்கம் நீண்டக்காலமாக இருந்துவரும் நிலையில் குறிப்பிட்ட இந்த நாடுகளுக்கு ஏற்றவாறே இன்று அரசாங்கம் செயற்படுவதோடு தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் சில கட்சிகளும் இந்த அரசாங்கத்தை கொண்டு தங்களது சுய நல தேவைகளை நிறைவேற்றி கொள்ள முயல்கின்றன. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை மறுபுறம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளும் மக்களுக்கு உரியவாறு கிடைப்பதில்லை.
வெறுமனே வாக்குறுதிகளை வழங்கி தங்களது தேவைகளையே நிறைவேற்றி கொள்கின்றது. இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் விரோதமானதும் நாட்டிற்கு பொருத்தமற்றதுமான தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றிக் கொண்ட இந்த அரசாங்கத்துக்கு நாட்டை பிளவுப்படுத்தும் புதிய அரசியல் அமைப்பிற்கான பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வது கடினமான விடயம் அல்ல என்றே குறிப்பிட வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாகவும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாது. அதன் காரணமாக நாங்கள் மக்கள் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளோம். பொதுமக்களின் எதிர்ப்பு சக்திமிக்கதாக இருக்கும் நிலையில் மட்டுமே இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கை கட்டுப்படுத்த முடிவதோடு அதற்கான செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.