ஊடகவியலாளர்களை நான் அச்சுறுத்தவில்லை - மறுக்கிறார் ரணில்
நான் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியாதாக கூறப்படுகிறது. எந்தவொரு ஊடகவியலாளரையும் நான் அச்சுறுத்தவில்லை. பெயரை மாத்திரமே கூறினேன். ஊடகங்கள் எம்.பி.க்களின் பெயர்களை சுட்டிக்காட்ட முடியுமென்றால் ஏன் எமக்கு ஊடகவியலாளர்களின் பெயரை சுட்டிக்காட்ட முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.
உயர் குலத்தோரின் பின்னால் திரிந்தவர்கள், உண்டு குடித்தவர்கள் தொடர்பிலோ, உயர் குலத்தோராக இருந்து தற்போது வீழ்ச்சியடைந்து கிடப்போர் பற்றியோ எமக்கு அக்கறை கிடையாது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தின் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின்போது அமைச்சு தொடர்பான அறிவித்தல் ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,
நேற்றைய (நேற்று முன்தினம்) எனது உரையின் போது நான் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதாக இங்கு உரையாற்றிய எம்.பி. ஒருவர் கூறியிருந்தார். நான் யாரையும் அச்சுறுத்தவில்லை. ஊடகங்களில் வெளியான விடயங்களை சுட்டிக்காட்டியே உரையாற்றியிருந்தேன். பெயர் குறிப்பிட வேண்டிய தேவையின் பொருட்டு அதனைச் சுட்டிக்காட்டினேன். ஊடகங்களுக்கு எம்.பி.க்களின் பெயர்களைக் குறிப்பிட முடியுமானால் ஏன் எமக்கு ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பி முடியாது?
ஊடக சுதந்திரத்திற்காக நேரடியாக ஊடகவியலாளர்களும் இருக்கின்னர். எனினும் உயர் குலத்தார் என்று கூறி உயர் குலத்தோரிடத்தில் உண்டு குடித்து பின்னால் சென்றவர்கள் தொடர்பில் எமக்கு அக்கறையில்லை. மேலும் உயர்குலத்தோர் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.