திருகோணமலை இரகசிய முகாமில் இருந்து மீட்கப்பட்டவை மனித எலும்புத் துண்டுகளா?
திருகோணமலை கடற்படை தளத்தின் வளாகத்தில் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி இரகசிய தடுப்பு முகாமில் இருந்து மீட்கப்பட்ட 10 எச்சங்களும் மனித எலும்புத் துண்டுகளா அல்லது மிருகங்களினதா என தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
அத்துடன் கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட 11 பேரில் ஒருவருக்கு சொந்தமான வேன் கடற்படையினரால் இலக்கத் தகடு மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்து டன் இயந்திரம் மற்றும் செஸி இலக்கங்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடர்வதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளை தொடர்பிலான பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டியவுக்கு நேற்று அறிவித்தார்.
கொழும்பிலிருந்து 2008 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் நேற்று நடைபெற்றபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா மேற்கண்டவாறு நீதிவானிடம் தெரிவித்தார்.
தெஹிவளையில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் பயணம் செய்த காரோடு சேர்த்து கடத்தப்பட்டனர்.
மூன்று மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக பெயர் குறிப்பிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வேளையில் சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் விசாரணை நடைபெற்றது.நேற்றைய வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது மனுதாரர்களான முதலாம் இரண்டாம் நபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத் தரணி கே.வி.தவரசா, சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மூன்றாம் நபர் சார்பில் சட்டத்தரணி ஜே.சி.வெலி அமுனவும் ஆஜராகினர். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்டவாதி துஷித் முதலிகேயும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந் நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வாவிடம் நீதிவான் கேள்வி எழுப்புகையில்இந்த மாணவர்கள் தடுத்து வைக்கப்ப்ட்டிருந்த பகுதியில் இருந்து எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதாக பத்திரிகை ஊடாக அறிந்துகொண்டேன். எனினும் அது குறித்து நீங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. உண்மையில் அங்கு மனித எலும்புக் கூடுகளை நீங்கள் மீட்டீர்களா? என வினவினார்.
இதற்கு பதிலளித்த பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா,
உண்மையில் வெளி நாட்டு மேற்பார்வையாளர்களுடன் திருமலையில் உள்ள கடற்படை தளத்தின் கன்சைட் எனும் நிலத்தடி இரகசிய முகாமுக்கு சென்றிருந்த போது சில எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை தற்போது கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் ஆய்வுகளுக்காக அனுப்பட்டுள்ளன. அது குறித்து இன்னும் அறிக்கை கிடைக்கவில்லை. என்னை பொறுத்தவரை அது விலங்குகளின் எழும்புகளாக இருக்க வேண்டும். எனினும் அறிக்கை கிடைக்கும் வரை எதனையும் கூற முடியாது. என்றார்.
இதன் போது இடை மறித்த நீதிவான் கிஹான் பிலபிட்டிய எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன என கேள்வி எழுப்பினார்.அவை எலும்புக் கூடுகள் என்பதை விட எலும்புத் துண்டுகள் என்பதே சரியாக இருக்கும். சுமார் 10 எலும்புத் துண்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டன.
அத்துடன் இந்த ஐந்து மாணவர்களுக்கும் மேலதிகமாக அதே காலப்பகுதியில் வத்தளையில் வைத்து கடத்தப்பட்ட ஜோன் ரீட் என்பவரின் வேன் கடற்படையின் அடையாளத்துடன் 6021 என்ற இலக்கத்துடன் கடற்படையின் சமுத்திரவியல் விஞ்ஞான பீடத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நாம் முன்னெடுத்த விசாரணைகளில் கடற்படையினரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அந்த வாகனத்துடன் பொருந்தவில்லை. டொல்பின் ரக வேனான குறித்த வாகனத்தின் இயந்திரத்தின் இலக்கமும் செஸி இலக்கமும் ஒன்றுடன் ஒன்று வித்தியாசப்படுவது உறுதியாகின்றது. இது குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளர் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். எனவே விசாரணைகள் தொடர்கின்றன. என்றார்.
இதனை அடுத்து சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரசன்னமாகியிருந்த சிரேஷ்ட சட்ட வாதி துசித் முதலிகே, தமது இடைக்கால அறிக்கை ஒன்றினை மன்றில் சமர்ப்பிக்க நீதிவானிடம் அனுமதி கோரினார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் நிறைவடையாத நிலையிலும் கோட்டை நீதிமன்றிலும் இது தொடர்பிலான வழக்கொன்று நிலுவையில் உள்ள நிலையிலும் இடைக்கால அறிக்கை ஊடாக முடிவொன்றக்கு வர முடியாது என இதன் போது நீதிவான் கிஹான் பிலபிட்டிய சுட்டிக்காட்டினார்.
இதன் போது குறுக்கிட்ட பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, முன்னாள் கடற்படை தளபதிக்கு இந்த விவகாரம் தொடர்பில் தெரிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதால் அவரையும் விசாரணைக்கு அழைக்குமாறு கோரினார். எனினும் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சட்ட வாதி துசித் முதலிகே எதிர்ப்பு தெரிவித்தார்.
இந் நிலையில் தான் மேன்முறையீட்டு மன்றுக்கு இடைக்கால அறிக்கையினை சமர்ப்பிக்க முடியாது எனவும் குறித்த ஆட்கொணர்வு மனு தொடர்பில், தற்போது முன்னெடுக்கப்ப்ட்டுள்ள பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளின் பின்னரேயே தாம் அறிக்கை சம்ர்பிக்கப் போவதாகவும் நீதிவான் அறிவித்தார்.
குறித்த முகாமில் எழும்புகள் மீட்கப்பட்டமையானது இந்த ஆட்கொணர்வு மனுவை பொறுத்தவரை மிக முக்கியமான விடயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிவான் அதன் அறிக்கை எப்போது கிடைக்கும் என புலனாய்வுப் பிரிவிடம் கேட்டார். அதற்கு 3 மாதங்கள் செல்லும் எனவும் அதில் ஒரு மாதம் தற்போதும் கழிந்துவிட்டதாகவும் பொலிஸ் பரிசோதகர் பதிலளித்தார்.
இதனையடுத்து இது குறித்த விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிவான் கிஹான் பிலபிட்டிய அன்றைய தினம் சட்ட மா அதிபர் சார்பில் முழுமையான அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்க உத்தர்விட்டார்.