ஊடகங்கள் வேட்டையில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப் போவதில்லை - சபையில் பிரதமர்
ஒரு நாட்டின் சட்டத்தை நிலை நாட்டுவதானால் அது பொலிஸ், ஊடகம் மற்றும் நீதி்துறை ஆகிய முத்தரப்புக்களின் இணைந்த செயற்பாட்டின் அடிப்படையிலேயே சாத்தியம் என பிரதனர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்;
நாட்டில் சட்டத்தை பொலிஸாரினால் மாத்திரம் நிலை நிறுத்துவிட முடியாது. பொலிஸ் துறையை இல்லாது செய்தது போன்றே நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றையும் மஹிந்த ரெஜிமன்ட் இல்லாது செய்து விட்டது.
இன்று ஊடகங்கள் இனவாதத்தை பரப்புவதற்கு செயற்பட்டு வருகின்றன. ஆங்கில – சிங்கள ஊடகங்கள் இனவாதத்துக்கு துணைபோகின்றன. ஊடகவியலாளர்கள் பலர் இனவாதிகளாக செயற்பட்டு ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் பேசுகின்ற , எழுதுகின்ற ஊடகங்கள் “ஹோமாகம சம்பவம் பற்றி பேசுகின்றனவா, எழுதுகின்றனவா? எந்தவொரு ஆசிரிய தலையங்கமும் ஹோமாகம சம்பவத் தொடர்பில் எழுதியுள்ளதா?
ஊடகவியலாளரை வெள்ளை வேனில் கடத்துவதற்கு குறித்த ஊடகத்தின் ஆசிரியரே செயற்பட்டிருந்தமை எமக்கு தெரியாமல் இல்லை.
இன்று இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்துமே இனவாதத்தை தூண்டி செயற்பட்டு வருகின்றன. ஊடகங்கள் வேட்டையாடும் செயற்பாடுகளில் செயற்பட்டு இனவாதத்துக்கு துணைபோகக் கூடாது. ஊடகங்கள் எந்த இடத்தில் நின்று செயற்பட வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
இதேவேளை அபேராம விஹாரையில் நேற்று (நேற்று முன்தினம்) இரகசியக்கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மஹிந்த ஆதரவு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இங்கு கலந்து கொண்டவர்கள், பேசப்பட்ட விடயம் என அனைத்தும் நாம் அறிவோம். அரசாங்கத்திடம் பலம் இல்லை என்றோ, எதுவும் செய்யமுடியாது என்றோ எண்ண வேண்டாம். அனைத்தையும் அடக்குவதற்கு செயற்படுவோம்.
தற்போது விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் நல்ல பெறுபேறுகளைக் காண முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.