மருத்துவமனையில் ஞானசார தேரர் அனுமதி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹோமகம நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 9ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றுமுன்தினம் ஹோமகம நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, நேற்றுமுன்தினம் மாலை வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஞானசார தேரர் அனுமதிக்கப்பட்டார்.
சிறைச்சாலையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனது உயிருக்கு ஆபதது ஏற்படலாம் என்றும், ஞானசார தேரர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்திருந்தார்.இதையடுத்து, வெலிக்கடைச் சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தனியானதொரு இடத்தில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று அவர் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் அதிகாரிகளிடம் கேட்டார். இதையடுத்து. சிறைச்சாலை மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தனர். அதையடுத்து. சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து, ஈசிஜி உள்ளிட்ட சில பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை ஞானசார தேரர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும், வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் எல்லா வசதிகளுடனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் சார்பில், ஹோமகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்ததாலேயே ஞானசார தேரரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.