இலங்கை வரும் சுஷ்மா - விக்னேஸ்வரன், சம்பந்தனுடனும் சந்திப்பு
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெப்ரவரி 5-ம் திகதி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது அவர், கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தில் அவர் பங்கேற்று இரு தரப்பு மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போன்ற விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது,
"சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க வருவதாகக் கூறி தமிழக மீனவர்கள் பலரை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாடுகளின் கூட்டு ஆணையம் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் இரு தரப்பு வெளிவிவகார அமைச்சர்கள், உயரதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆணையத்தின் கூட்டம் கொழும்பில் பெப்ரவரி 5-ம் திகதி நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் பரஸ்பரம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவது குறித்தும், எல்லை தாண்டும் மீனவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதிப்பர் என, குறிப்பிட்டார்."
மேலும் இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சுஷ்மா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் பெப்ரவரி 6ம் திகதி யாழ்ப்பாணம் செல்லும் சுஷ்மா சுவராஜ், அங்கு இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.