கொக்கட்டிச்சோலை படுகொலையின் நினைவு (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 29ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்திருந்த இந்நினைவு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் கொக்கொடிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீநேசன் எஸ்.வியாழேந்திரன், சி.யோகேள்வரன், என்.ஸ்ரீதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, இறந்தவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உறவினர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.கடந்த 1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிக்கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இச்சம்பவத்தின்போது படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
மண்முனைத்துறைக்கும் மகிழடித்தீவுக்கும் இடையில் அமைந்திருந்த இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களின் இந்த படுகொலை சம்பவத்தை மனித உரிமைகள் அமைப்புகள் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.