காணாமற்போனோர் தொடர்பில் ஐ.நா பாதுகாப்பு பேரவையில் ஆராய்வு
இலங்கையில் காணாமற்போனோர் விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டத்தின்போது ஆராயப் பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் காணாமற்போனோர் தொடர்பில் கணக்கீடு செய்வது தொடர்பிலான பாதுகாப்புப் பேரவையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டத்தின்போது, ஐ.நாவிற்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய சமந்தா பவர், இலங்கை விஜயம் மற்றும் இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பிலான பிரச்சினை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பெருந்தொகையான பொதுமக்கள் காணாமற்போயுள்ள இரண்டு நாடுகளான இலங்கை மற்றும் மெக்சிக்கோவிற்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனது மகளை இராணுவ சீருடையில இருந்த ஒரு நபர் கடத்திச் சென்றதாகவும், அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற தனது மகளை அவர் அடித்து துன்புறுத்தியதாகவும் யாழ்ப்பாணத்தில் தன்னை சந்தித்த தாய் ஒருவர் தெரிவித்ததாகவும் சமந்தா பவர் விபரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும், குறித்த தாய் தனது மகள் தொடர்பில் எவ்வித தகவலும் அறியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை அரசாங்கம் ஒரு புதிய சட்டமூலத்தைக் கொண்டுவந்து காணாமற்போனோர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையி்ல் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், குறிப்பாக இரு நாடுகளிலும் இது குறித்து ஆராய்ந்து நம்பகத்தன்மை வாய்ந்த தரவுகளை சேகரித்து அந்த தகவல்களை காணாமற்போனவர்களது உறவினர்களுக்கு வழங்கவேண்டிய கடமை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.