சுன்னாகம் குடிநீர் பிரச்சினைக்கு இரணைமடு திட்டம் தான் ஒரே தீர்வு
இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டை இரண்டு அடி அதிகரித்து. அங்கிருந்து குடிநீரை விநியோகிப்பது தான், சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான ஒரே தீர்வு என்று நகர திட்டமிடல், நீர்விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதுபற்றிக் கூறுகையில்-
சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினைக்கு வழிகாணும் வகையில், இரணைமடுக் குளத்தில் இருந்து குடிநீரை வழங்கும் திட்டத்துக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன், 17 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்ட போதும், விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக, இந்த திட்டம் ஒரு ஆண்டாக இழுபறிக்குள்ளாகியிருக்கிறது.
சுன்னாகத்துக்கு குடிநீர் வழங்குவதால், விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து விளக்கமளிக்க இரணைமடுவைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கான கூட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படவுள்ளது.
சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.தேசிய நீர் வழங்கல் சபை இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீரை வழங்கி வருகிறது. தினமும், நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதால் இழப்பு ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.