வடக்கு முதல்வர் குறித்து கருத்து வெளியிட மறுத்தார் சுமந்திரன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வன் குறித்து கருத்து வெளியிட மறுப்புத்தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் அண்மைக்காலமாக இடைவெளியேற்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பபட்டது.
இதன்போது அது குறித்து நான் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிட முடியாதென சுமந்திரன் குறிப்பிட்டார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் வடமாகாண முதலமைச்சருக்குமிடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அதனைத்தொடர்ந்து இரு தரப்பினரும் பரஸ்பரம் கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் அம் முரண்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு முதல்வருக்குமிடையில் பிரத்தியேகச் சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது.
அதேநேரம் வடக்கு முதல்வர் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியை ஏற்றிருந்ததோடு அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோதும் தமிழ் மக்கள் பேரவையிலிருந்து விலகமாட்டேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.