மைத்திரி விவாகரத்து செய்ய வேண்டும் : வாசு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடனான திருமண உறவை முறித்து அக்கட்சியை விவாகரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்தான 12 ஒப்பந்தங்கள் குறித்து நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தின் போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.
‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை துண்டிக்க வேண்டும். அந்த உறவை துண்டித்து விவகாரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் நல்லதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதனை ஜனாதிபதி தவிர்த்து கொண்டால் மட்டுமே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதி செய்ய முடியும்.
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை உறுதி செய்ய முயற்சித்து வருவதாக கூறுகிறார். அதுமாத்திரமல்லாமல் எங்களையும் இணையுமாறு கோரியுள்ளார்.
ஜனாதிபதி இரு திருமணங்களைச் செய்து கொண்டு முன்னேறிச் செல்ல முடியாது. சுதந்திரக் கட்சியோ, சுதந்திர முன்னணியே ஒற்றுமைப்பட்டு உறுதிப்படவேண்டுமானால் ஐக்கிய தேசிக் கட்சியின் உறவைத் துண்டிக்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டாலே, மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்’ எனறும் கூறினார்.