Breaking News

சிறுவன் படுகொலை! கடற்படையினர் மீது சந்தேகம்

மீள் குடியேற்றப்பட்டுள்ள சம்பூர் 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குகராசா தர்ஷன் (வயது 6) நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சேனையூர் மத்திய கல்லூரியில் இம்முறை தரம் 1ல் சேர்ந்த இம்மாணவன் மாலை 6.30 மணிவரை அவர்களது தற்காலிக வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் சிறுவனைக் காணாத பெற்றோர்கள் சிறுவனை தேடிச் சென்றபோது இரவு 8.00 மணியளவில் வீட்டில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இருந்து இச்சிறுவனின் உடலம் சம்பூர் விதுரா கடற்படை முகாமிற்கு அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இச் சிறுவனின் உடல் படைக் காலணி ஒன்றின் கயிறுகளால் கல் ஒன்றுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் சிறுவனின் உடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பாலியல் வன்புணர்வு இடம்பெற்றமைக்கான தடயங்களும் காணப்பட்டுள்ளன.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கடற்படையினர் மீது சந்தேகம் கொள்கின்றனர். மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.